பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 713 

   (இ - ள்.) அலர் கதிர் கரும்பிளை மடுப்ப - எழுகின்ற கதிரையுடைய ஞாயிற்றைக் கரிய காக்கை வலமாக நெருங்க; ஆய்நகர் உலகு அளந்தான் என உள்புக்கான் - சந்திராப நகரைக் கண்டு உலகளந்தவனைப்போல உள்ளே சென்றவன்; மலர் அணி மணிக்குடம் மண்ணும் நீரொடு - மலரணிந்த, மணிகள் இழைத்த குடத்தில் உள்ள மண்ணும் நீரினால்; பலர் நலம்பழிச்சுபு பரவ ஏகினான் - பலரும் ஆட்டி இவனுடைய பண்பைப் புகழ்ந்தேத்தச் சென்றான்.

   (வி - ம்.) கரும்பிள்ளை - காக்கை. சீவகன் வடக்கு நோக்கிச் செல்லும்போது, மேற்கிருந்த காகம் ஞாயிற்றின் மேற்செல்லவே காகம் வலமாயிற்று. இந் நிமித்தத்தின் பயனால் மண்ணு நீரால் ஆட்டும் வரவேற்புக் கிடைத்தது. 'மழகளிற் றெருத்தில் தந்த மணிக்குடம் மண்ணு நீரால் - அழகனை மண்ணுப் பெய்தாங்கு' (சீவக. 1345) என்பர் பின்னும். இனி நாட்டிற்கும் ஊரிற்கும் தனித்தனியே இரண்டு நிமித்தமாக்கி யுரைப்பாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். காகம் வலமாதல் நாட்டிலும், மண்ணு நீராட்டல் நகரினும் நிமித்தமெனக் கொள்ளல் வேண்டும் அவர் கருத்துப்படி.

( 87 )

வேறு

1253 சந்தனக் காவு சூழ்ந்து சண்பக மலர்ந்த சோலை
வந்துவீழ் மாலை நாற்றி மணியரங் கணிந்து வானத்
திந்திர குமரன் போல விறைமக னிருந்து காண
வந்தர மகளி ரன்னார் நாடக மியற்று கின்றார்.

   (இ - ள்.) சந்தனக் காவு சூழ்ந்து - சந்தனக் காவினைச் சூழ; சண்பகம் மலர்ந்த சோலை - சண்பகம் பூத்த பொழிலிலே; வந்துவீழ் மாலை நாற்றி - நிலத்தில் வந்து விழும் மாலைகளைத் தூக்கி; மணி அரங்கு அணிந்து - மணிகள் இழைத்த மேடையை அணிசெய்து; வானத்து இந்திர குமரன்போல இறைமகன் இருந்து காண - வானத்திலுள்ள இந்திரன் மகனான் சயந்தன் போல அரசன் மகன் அமர்ந்து காணுமாறு; அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்றுகின்றார் - விண்ணவர் மகளிர் போன்றார் நாடகம் நடத்துகின்றனர்.

   (வி - ம்.) சீவகன் செல்லும்போது நகரில் நாடகம் நடைபெறுகிறதென்று கொள்க.

   சந்தனக்காவு - சந்தனச்சோலை. அரங்கு - கூத்தாடு மேடை. இந்திரகுமரன் - சயந்தன். இறைமகன் - உலோகபாலன். அந்தர மகளிரன்னார் - தேவமகளிரை ஒத்த கூத்தியர். காவு - சோலை. நாற்றி - தொங்கவிட்டு. இஃது பிறவினை. நான்று என்பது தன்வினை. ”இந்திரகுமரன் போல” என்றதற்கு ஏற்ப, ”அந்தர மகளிரன்னார்” என்றார்.

( 88 )