பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 720 

1265 போதவிழ் தெரிய லானும் பூங்கழற் காலி னானுங்
காதலி னொருவ ராகிக் கலந்துட னிருந்த போழ்தி
னூதுவண் டுடுத்த மாலை யுணர்வுபெற் றிலயந் தாங்கிப்
போதுகண் டனைய வாட்கட் புருவத்தாற் கலக்கு கின்றாள்

   (இ - ள்.) போது அவிழ் தெரியலானும் - அரும்பு மலர்ந்த மாலையானான அவ்வரச குமரனும்; பூங் கழற் காலினானும் - அழகிய கழலணிந்த சீவகனும்; காதலின் ஒருவர் ஆகிக் கலந்து உடன் இருந்த போழ்தின் - காதலால் ஒருவரே போலாகி உளங்கலந்து ஒன்றாக அமர்ந்திருந்த போது; ஊது வண்டு உடுத்த மாலை - முரலும் வண்டுகள் மொய்த்த மாலை போல்வாளான தேசிகப் பாவை; உணர்வு பெற்று - (இனி இவனைப் பெற்றோம் என்று) தெளிவு கொண்டு; இயலம் தாங்கி - தாள அறுதிகளைத் திரும்பவும் ஒழுங்காகக் கொண்டு; போது கண்டனைய வாள்கண் புருவத்தால் கலக்குகின்றாள் - மலரைப் பார்த்தாலனைய ஒளிமிகு கண்ணாலும் புருவத்தாலும் அவையைக் கலக்கத் தொடங்கினாள்.

   (வி - ம்.) தெரியலான் - மாலையையுடையவன் : உலோகபாலன். காலினான் : சீவகன், அவையத்தோர் கண்கள் எல்லாம் அவள் அழகினைப் பருகலால் 'ஊது வண்டுடுத்த மாலை' என்றார். இலயம் - தாளவறுதி. கண் புருவ முதலியவற்றாலியற்றும் அவிநயத்தழகாற் காண்போர் உளத்தைக் கலக்கினாள் என்பது கருத்து.

( 100 )
1266 தேனுகுக் கின்ற கண்ணித் திருமக ளாட விப்பா
லூனுகுக் கின்ற வைவே லொருமக னுருமிற் றோன்றி
வானுகுக் கின்ற மீன்போன் மணிபரந் திமைக்கு மார்பிற்
கானுகுக் கின்ற பைந்தார்க் காவலற் றொழுது சொன்னான்

   (இ - ள்.) தேன் உகுக்கின்ற கண்ணித் திருமகள் ஆட - தேனைச் சொரிகின்ற கண்ணி புனைந்த திருவனையாள் இங்ஙனம் ஆட; இப்பால் - இங்கு; ஊன் உகுக்கின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி - ஊனைச் சிந்தும் கூரிய வேலணிந்த ஒரு வீரன் இடியெனத் தோன்றி; வான் உகுக்கின்ற மீன்போல் மணி பரந்து இமைக்கும் மார்பில் - வானிலிருந்து சிந்திய மீன்களைப் போல மணிகள் பரவி ஒளிரும் மார்பிலே; கான் உகுக்கின்ற பைந்தார்க் காவலன் தொழுது சொன்னான் - மணங்கமழும் பைந்தாரணிந்த காவலனைத் தொழுது கூறினான்.