பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 723 

1270 நறவிரி சோலை யாடி நாண்மலர்க் குரவம் பாவை
நிறையப்பூத் தணிந்து வண்டுந் தேன்களு நிழன்று பாட
விறைவளைத் தோளி மற்றென் றோழியீ தென்று சோ்ந்து
பெறலரும் பாவை கொள்வாள் பெரியதோ ணீட்டி னாளே.

   (இ - ள்.) நறவு விரி சோலை ஆடி - (அடைந்தவள்) தேன் மலர்ந்த பொழிலிலே விளையாடி; நாள் மலர்க் குரவம் பாவை வண்டுந் தேன்களும் நிழன்று பாட நிறையப் பூத்து அணிந்து - நாள்மலரையுடைய குரவம் பாவையை வண்டும் தேனும் நிழல் செய்து பாட நிறைய மலர்ந்து அணிய; இறைவளைத் தோளி ஈது என் தோழி என்று - கீற்றுக்களையுடைய வளையணிந்த தோளினாள் இப் பாவை என் தோழி என்றுரைத்து; பெறல் அரும் பாவை கொள்வாள் சேர்ந்து - கிடைத்தற் கரிய குரா மலரைக் கொள்வதற்கு அதனைத் தழுவி; பெரிய தோள் நீட்டினாள் - பெரிய தோளை நீட்டினாள்.

   (வி - ம்.) பாவை - குராமரத்தின் மலர். இது பாவை போலிருக்கும். குரவத்திற்கு 'நாள்மலர்' என்பது பெயரளவில் அடையாய் நின்றது. அணிந்து - அணிய : எச்சத்திரிபு. நிழன்று - நிழல் செய்து; ஏரோர்க்கு நிழன்ற கோலினை' (சிறுபாண். 233) என்றார் பிறரும். நறா என்பது நற என நின்றது. குரா என்பது அங்ஙனம் ஈறு குறுகி அம்சாரியை பெற்று நின்றது.

( 105 )
1271 நங்கைதன் முகத்தை நோக்கி நகைமதி யிதுவென் றெண்ணி
யங்குறை யரவு தீண்டி யௌவையோ வென்ற போகக்
கொங்கலர் கோதை நங்கை யடிகளோ வென்று கொம்போ்
செங்கயற் கண்ணி தோழி திருமகட் சென்று சோ்ந்தாள்.

   (இ - ள்.) அங்கு உறை அரவு - (அப்போது) அக்குரா மரத்தில் வாழும் பாம் பொன்று; நங்கை தன் முகத்தை நோக்கி - பதுமையின் முகத்தைப் பார்த்து; இது நகை மதி என்று எண்ணி - இது மறுவில்லாத ஒளியுறு திங்களென்று நினைத்து; தீண்டி - (முகத்திலே தீண்டாமற் கையிலே) தீண்டியதாக;