பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 727 

   (இ - ள்.) இது மண்டலி என்பார் - இவளைத் தீண்டிய இப் பாம்பு சீதமண்டலி என்பார்; இராசமா நாகம் என்பார் - இராசமா நாகம் என்னும் பாம்பே தீண்டியது என்பார்; கொண்டது நாகம் என்பார் - கடித்தது நாகப் பாம்பே என்பார்; குறைவளி பித்தொடு ஐயில் பிண்டித்துப் பெருகிற்று என்பார் - குறைவான வாதமும் பித்தமும் சிலேத்துமத்தைவிடத் திரண்டு பெருகியது என்பார்; பெரு நவை அறுக்கும் விஞ்சை - பெருங்குற்றத்தைத் தீர்க்கும் மந்திரங்கள்; எண்தவப் பலவும் செய்தாம் - அளவின்றிப் பலவற்றையும் இயற்றினோம்; இது என்று கேளாது என்பார் - இதனை ஏன் என்று கேளாது என்பார்.

   (வி - ம்.) 'என்று' என்பதைப், 'பெருநவை அறுக்கும் என்று' என முன்னர்க் கொண்டு கூட்டுவர். 'ஏன்று' எனப் பாடங் கொண்டு, 'ஏற்றுக் கொண்டு' எனப்பொருள் கூறலும் ஒன்று. 'இராசமா மந்தம்' என்றும் பாடம்.

( 111 )
1277 சிரையைந்தும் விடுது மென்பார் தீற்றுதுஞ் சிருங்கி யென்பார்
குரைபுன லிடுது மென்பார் கொந்தழ லுறுத்து மென்பா
ரிரையென வருத்தக் கவ்வி யென்புறக் கடித்த தென்பா
ருரையன்மி னுதிர நீங்கிற் றுய்யல ணங்கை யென்பார்..

   (இ - ள்.) சிரை ஐந்தும் விடுதும் என்பார் - ஐந்து சிரைகளையும் விடுவோம் என்பார்; சிருங்கி தீற்றுதும் என்பார் - சிருங்கியைப் பூசுவோம் என்பார்; குரைபுனல் இடுதும் என்பார் - ஒலிக்கும் நீரில் இடுவோம் என்பார்; கொந்து அழல் உறுத்தும் என்பார் - அழற்றும் நெருப்பினாற் சுடுவோம் என்பார்; இரையென வருந்தக் கல்வி என்பு உறக் கடித்தது என்பார் - இரையென எண்ணி வருந்தும்படி பற்றி என்பிற்படும் படி கடித்தது என்பார்; உரையன்மின் - பேசாதீர்கள்!; உதிரம் நீங்கிற்று - இரத்தம் போய்விட்டது; நங்கை உய்யலள் என்பார் - இனி இவள் பிழையாள் என்பார்.

   (வி - ம்.) சிரை ஐந்து: கையிரண்டு, காலிரண்டு, நெற்றி ஒன்று. சிருங்கி - ஒரு மருந்து; சுக்குமாம், 'சிங்கி' எனப் பாடமாயின் கற்கடக சிங்கி என்க. புனலிலிடுதல்; உயிருண்மை யறிதற்கும் நஞ்சு நீங்கற்கும். அழலுறுத்தல் உயிருண்மை யறிதற்கு.

( 112 )