பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 73 

   (இ - ள்.) பாவை அன்னவர் பந்து புடைத்தலின் - பாவையனைய மகளிர் பந்தடித்தலின்; தூவி அன்னம் வெரீஇப்போய் - தூவினையுடைய அன்னப்பறவை அஞ்சி யோடி; கோவை நித்திலம் மாடம் குழாமிசை - முத்துமாலை புனைந்த மாடத்திரளின் மேலே; வெண்மதி தன்னொடு துணையென்று மேவி யிருக்கும் - வெள்ளிய திங்களைத் துணையென்று கருதி அதனுடன் இருக்கும்.

 

   (வி - ம்.) [மதி இயங்குந்தோறும் தானும் இயங்கிற்று. என்பது குறிப்பு.]

( 96 )
126 திருவந் நீணகர்ச் செம்பொனி னீடிய
வுருவ வொண்கொடி யூழி னுடங்குவ
பரவை வெங்கதிர்ச் செல்வன பன்மயிர்ப்
புரவி பொங்கழ லாற்றுவ போன்றவே.

   (இ - ள்.) திருவ நீள்நகர் செம்பொனின் நீடிய உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ - அத்தகைய செல்வம் நிறைந்த நீண்ட மனைகளில், செம்பொன்னாலாகிய நீண்ட அழகிய ஒளிமிகுங் கொடிகள் முறையால் அசைவன; பரவை வெங்கதிர்ச் செல்வன பன்மயிர்ப் புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்ற - பரவிய வெப்பமான கதிர்களையுடைய ஞாயிற்றினுடைய குதிரைகளின் வெப்பந் தவிர்ப்பன போன்றன.

 

   (வி - ம்.) பரவை - பரத்தல்.

 

   இதனால் அந்நகரத்து மாந்தர்போன்று அந்நகரமும் தன்பால் வந்த விருந்தினை உபசரிக்கும் பண்பு உடைத்தாதல் கூறப்பட்டது. இது தற்குறிப்பேற்றம்.

( 97 )
127 இழைகொள் வெம்முலை யீர முலர்த்துவார்
விழைய வூட்டிய மேதகு தீம்புகை
குழைகொள் வாண்முகஞ் சூழ்குளி ரங்கதிர்
மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே.

   (இ - ள்.) விழைய இழைகொள் வெம்முலை ஈரம் உலர்த்துவார் - கணவர் விழைய இழையணிந்த விருப்பமூட்டும் முலைகளிலே கணவர் பூசிய சந்தனம் முதலியவற்றின் ஈரத்தை உலர்த்தும் மகளிர்; ஊட்டிய மேதகு தீம்புகை சூழ் - ஊட்டிய மேம்பட்ட இனிய புகை சூழ்ந்த; குழைகொள் வாள்முகம் - குழையணிந்த ஒளிமிகு முகம்; மழையுள் குளிர் அம்கதிர் மாமதி போன்ம் எனத் தோன்றும் - முகிலுட் குளிர்ந்த அழகிய கதிரையுடைய முழுமதி போலும் எனக் காணப்படும்.

 

   (வி - ம்.) உலர்த்துவார் : தொழிற்பெயர் [வினையாலனையும் பெயர்.]

 

   புகைசூழ் முகம் மழையுள் மாமதிபோலத் தோன்றும் என்க.

( 98 )