பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 740 

1299 பன்மலர்ப் படலைக் கண்ணிக்
   குமரனைப் பாவை நல்லார்
மன்னவன் பணியின் வாழ்த்தி
   வாசநெய் பூசி நன்னீர்
துன்னின ராட்டிச் செம்பொற்
   செப்பினுட் டுகிலுஞ் சாந்து
மின்னறும் புகையும் பூவுங்
   கலத்தொடு மேந்தி னாரே.

   (இ - ள்.) பன்மலர்ப் படலைக் கண்ணிக் குமரனை - பல மலர்களையும் தழைகளையும் கொண்டு தொடுத்த கண்ணியணிந்த சீவகனை; மன்னவன் பணியின் - அரசன் கட்டளைப்படி; பாவை நல்லார் - பணிப்பெண்கள்; வாழ்த்தி - வாழ்த்துக் கூறி அழைத்துச் சென்று; துன்னினர் வாசநெய் பூசி - நெருங்கி மணமிகு நெய்யைப் பூசி; நல்நீர் ஆட்டி - நல்ல நீரைக்கொண்டு முழுக்காட்டி; செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும் இன்நறும் புகையும் பூவும் கலத்தொடும் எந்தினார் - பொற்பேழையில் ஆடையையும் சந்தனத்தையும் இனிய நறிய புகையையும் மலரையும் பூணையும் ஏந்தி அணிந்து கொள்ளச் செய்தனர்.

   (வி - ம்.) படலைக்கண்ணி - தாமரைக்கொழுமுறியினையும் அதன் மலரினையும் குவளையையும் கழுநீர் மலரினையும் விரவித் தொடுப்ப தொரு மாலை. குமரன் : சீவகன். மன்னவன் : தனபதி. துன்னினர் : முற்றெச்சம். கலம் : அணிகலன்.

( 134 )
1300 ஏந்திய வேற்பத் தாங்கி யெரிமணிக் கொட்டை நெற்றி
வாய்ந்தபொன் குயிற்றிச் செய்த மரவடி யூர்ந்து போகி
யாயந்தநன் மாலை வேய்ந்த வரும்பெறற் கூடஞ் சோ்ந்தான்
பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பி னாரே.

   (இ - ள்.) ஏந்திய ஏற்பத் தாங்கி - அவர்கள் ஏந்தியவற்றைப் பொருந்த மெய்யில் அணிந்து; எரிமணிக் கொட்டை - ஒளிரும் மாணிக்கக் கொட்டையை; நெற்றி வாய்ந்த பொன்குயிற்றிச் செய்த மரஅடி ஊர்ந்து - நெற்றியிலே அழுத்திப் பொன்னாற் செய்த மர வடியைத் தொட்டுச் சென்று; ஆய்ந்த நல்மாலை வேய்ந்த அரும்பெறல் கூடம் சேர்ந்தான் - ஆராய்ந்த நல்ல மாலைகளைப் புனைந்த பெறற்கரிய கூடத்தை அடைந்தான்; பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பினார் - அழகிய வளையணிந்த மாதர்கள் வாழ்த்துக் கூறிப் பொற்கலங்களைப் பரப்பினர்.