பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 747 

   (இ - ள்.) நகைவெண் திங்களும் - ஒளியுறும் வெண்மையான நிலவும்; நார்மடல் அன்றிலும் - நாரையுடைய பனைமடலில் இருக்கும் அன்றிலும்; தகைவெள் ஏற்று அணல் தாழ்மணி ஓசையும் - பெருமைமிக்க வெள்ளேற்றின் அணலிலே தங்கிய மணியின் ஒலியும்; பகைகொள் மாலையும் - பிரிந்திருப்பவர்க்குப் பகை செய்யும் மாலைபபோதும்; பையுள்செய் ஆம்பலும் -துன்ப மூட்டும் ஆம்பற் பண்ணை யெழும்பும் குழலும்; புகைஇல் பொங்கு அழல்போல் சுடுகின்ற - புகை இல்லாது பொங்கும் நெருப்பைப்போலச் சுடுகின்றன.

   (வி - ம்.) புகை இல்லாத அழல் : இல்பொருளுவமை.

   அன்றில் பனைமடலில் உறையும் இயல்புடையதென்ப. ”மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுணர் அன்றில்” (நற்றிணை, 303. 4. 5) என்றார் பிறரும்.

( 149 )
1315 பூமென் சேக்கையு ணாற்றிய பூந்திரட்
டாமம் வாட்டுந் தகைய வுயிர்ப்பளைஇக்
காமர் பேதைதன் கண்டரு காமநோ
யாமத் தெல்லையோர் யாண்டொத் திறந்ததே.

   (இ - ள்.) பூமென் சேக்கையுள் நாற்றிய பூந்திரள் தாமம் - மலரால் அமைத்த மெல்லிய அணையிலே தூக்கிய மலர்கள் திரண்ட மாலைகளை; வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇ - மெலிவிக்கும் தன்மையவாகிய நெட்டுயிர்ப்பைக் கலந்து; காமர் பேதைதன் கண்தரு காமநோய் - அழகிய அப் பேதைக்குத் தன் கண் தந்த நோயாலே; யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்தது - இராப் பொழுதின் எல்லை ஓராண்டின் அளவையொத்துக் கழிந்தது.

   (வி - ம்.) நச்சினார்க்கினியர் (144) முதல் - (150) வரை ஒரு தொடராக்கி ”அண்ணல் நோயுறாநிற்கக், கோதையும் நல்லவர் தொழச்சென்று : பள்ளியிலே வைகினாள்; அங்ஙனம் வைகியவள், 'திங்கள் முதலியன சுடா நின்றன;அதனால் என் நெஞ்சம் மறுகுகின்றது; இங்ஙனம் நிறைகொண்ட கள்வனை யான் ஐயுற்று அறிகின்றிலேன்; தெய்வங்களே! நீவிரும் உரைத்தலீர்! உரையீராயினும் என் ஆவி துயர்மீட்டவன் இன்னும் அருளுவனோ என்று அவனிடத்தே ஆகா நின்றது, என்று தெய்வத்தை நோக்கிக் கூறி, உயிர்ப்பளைஇ உருகிப் பின்னும் அவன் நெஞ்சிடத்தேயாதலின் இறந்துபடாள் ஆயினாள். அப்பேதைக்குக் கண்தந்த நோயால் இராப்பொழுது கழிந்தது” என்று முடிப்பர்.

( 150 )
1316 மாதி யாழ்மழ லைம்மொழி மாதரா
டாதி யவ்வையுந் தன்னமர் தோழியும்
போது வேய்குழற் பொன்னவிர் சாயலுக்
கியாது நாஞ்செயற் பாலதென் றெண்ணினார்.