பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 761 

1344 கணிபுனைந் துரைத்த நாளாற் கண்ணிய கோயி றன்னுண்
மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
யணியுடைக் கமல மன்ன வங்கைசோ் முன்கை தன்மேற்
றுணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார்.

   (இ - ள்.) கணி புனைந்து உரைத்த நாளால் - கணி ஆராய்ந்து கூறிய நாளிலே; கண்ணிய கோயில் தன்னுள் - நன்றென்று கருதிய கோயிலிலே; மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி - மணி புனைந்த மகளிராகிய நல்லார் மங்கல மரபினை உரைத்து; அணியுடைக் கமலம் அன்ன அங்கை சேர் முன்கை தன்மேல் - அழகுறு தாமரை அன்ன அங்கையினையுடைய முன் கையிலே; துணிவுடைக் காப்புக் கட்டி - (இருவர்க்கும்) உறுதியுறு காப்பினை அணிய; சுற்றுபு தொழுது காத்தார் - சுற்றித் தொழுது புறப்படாமற் காத்தார்.

 

   (வி - ம்.) கணி - கணிவன். கண்ணிய - கருதிய. கட்டி - கட்ட. சுற்றுபு - சுற்றி.

( 179 )
1345 மழகளிற் றெருத்திற் றந்த
  மணிக்குட மண்ணு நீரா
லழகனை மண்ணுப் பெய்தாங்
  கருங்கடிக் கொத்த கோலந்
தொழுதகத் தோன்றச் செய்தார்
  தூமணிப் பாவை யன்னார்
விழுமணிக் கொடிய னாளும்
  விண்ணவர் மடந்தை யொத்தாள்.

   (இ - ள்.) தூ மணிப் பாவை அன்னார் - தூய மாணிக்கப் பாவை போன்றவர்; மழ களிற்று எருத்தில் தந்த மணிக்குடம் மண்ணும் நீரால் - மழகளிற்றின் பிடரிலே கொண்ர்ந்த மணிக்குடத்திலிருந்து குளிக்கும் நீரினால்; அழகனை மண்ணுப் பெய்து - சீவகனைக் குளிப்பாட்டி; ஆங்கு அருங்கடிக்கு ஒத்த கோலம் - அவ்விடத்தே திருமணத்திற்குப் பொருந்திய ஒப்பனையை; தொழுதகத் தோன்றச் செய்தார் - நன்கு மதிக்கும்படி விளங்க ஒப்பித்தனர்; விழு மணிக்கொடி அனாளும் - சிறந்த மாணிக்கக்கொடி போன்ற பதுமையும்; விண்ணவர் மடந்தை ஒத்தாள் - (அவ்வொப்பனையாலே) வானவர் மகள் போன்றனள்.

 

   (வி - ம்.) மழகளிறு - இளைய யானை. எருத்து - பிடர். மண்ணுநீர் - மங்கல நீராடற்குரிய கடவுள்நீர். அழகனை : சீவகனை. மண்ணுப்பெய்து - (மங்கல) நீராட்டி. கடி - திருமணம். பாவையன்னார் - ஈண்டு வண்ணமகளிர். மணிக்கொடியனாள் : பதுமை.

( 180 )