பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 763 

   (இ - ள்.) தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும் - (பிறரழகைக்) கீழ்ப்படுத்தும் திருமகளின் அழகையும்; பிணிக்கும் பீடு இனி என் செயும் - பிணிக்கும் இவர் தகைமை மேலும் என்ன செயும்!; பேதை தன்மணிக்கண் வெம்முலை தாம் பொர - பதுமையின் மணிக் கண்ணையுடைய முலைகள் ஆகிய யானைகள் பொருதலால்; அணிக்கந்து அன்னவன் தார் அங்கு வாய் அவிழ்ந்து உடைந்தது - அழகிய தூணனையவன் மாலை அங்கே கட்டலர்ந்து மலர்ந்தது.

 

   (வி - ம்.) வாய் அவிழ்தல் அரும்பின் வாயவிழ்தலும் அவ்விடத்தினின்றும் நிலைகுலைதலுமாம். தார் : மாலையும், தூசிப்படையும். பிணிக்கும் பீடு : இருவருக்கும் பொது.

( 183 )
1349 பரிந்த மாலை பறைந்தன குங்குமங்
கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியி
னரிந்த மேகலை யார்த்தன வஞ்சிலம்
பிரிந்த வண்டிளை யார்விளை யாடவே.

   (இ - ள்.) கலந்த மகிழ்ச்சியின் இளையார் விளையாட - கூடிய மகிழ்ச்சியினாலே இளைஞராகிய அவர்கள் விளையாடுதலினால்; மாலை பரிந்த - மார்பிலுள்ள முத்தமாலைகள் அற்றன; குங்குமம் பறைந்தன - குங்குமச் சாந்து அழிந்தன; கண்ணி கரிந்த - முடியில் அணிந்த கண்ணிகள் கரிந்தன; மேகலை அரிந்த - மேகலையிலுள்ள மணிகள் அற்றன; அம் சிலம்பு ஆர்த்தன - அழகிய சிலம்புகள் ஒலித்தன.

 

   (வி - ம்.) இவ்விரண்டு செய்யுட்களையும் ஒரு தொடராக்கிப் 'பிணிக்கும் பீடினி என் செயும்!' என்பதை இறுதியிற் சேர்ப்பர் நச்சினார்க்கினியர்.

( 184 )
1350 கொழுமெ னின்னகிற் கூட்டுறு மென்புகை
கழுமு சேக்கையும் காலையு மாலையுந்
தழுவு காத றணப்பிலர் செல்பவே
யெழுமை யும்மியைந் தெய்திய வன்பினார்.

   (இ - ள்.) எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் - எழு பிறப்பும் பொருந்திப் பெற்ற அன்பினார்; கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென்புகை - கொழுவிய மெல்லிய இனிய அகிலுடன் கூட்டிடும் பொருள்கள் கலந்த மெல்லிய புகை; கழுமு சேக்கையுள் - பொருந்திய அணையிலே; காலையும் மாலையும் தழுவு காதல் தணப்பு இலர் செல்ப - காலையினும் மாலையினும் பொருந்திய காதல் நீங்கலராய்ச் சென்றனர்.

 

   (வி - ம்.) கூட்டு - நேர்கட்டி முதலிய மணப் பொருள்கள்.