பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 768 

1357 சிலம்பெனும் வண்டு பாட மேகலைத் தேன்க ளார்ப்ப
நலங்கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக்
கலந்தனன் காம மாலை கலையின தியல்பிற் சூட்டப்
புலம்புபோய்ச் சாய லென்னும் புதுத்தளி ரீன்ற தன்றே.

   (இ - ள்.) சிலம்பு எனும் வண்டு பாட - சிலம்பாகிய வண்டுகள் முரல; மேகலைத் தேன்கள் ஆர்ப்ப - மேகலை யென்னும் தேனினம் ஆரவாரிக்க; நலம் கவின் போது பூத்த - உறுப்புக்களின் இயற்கை அழகும் செயற்கை அழகும் ஆகிய மலர்கள் மலர்ந்த; பூங்கொடி நடுங்கி நாண - தேசிகப் பாவை நடுங்கி வெள்க; கலந்தனன் - கூடினான்; காம மாலை கலையினது இயல்பில் சூட்ட - காமமாகிய மாலையைக் (காந்தருவ மணங் கூறிய) நூலின் இயல்பாலே அணிவித்தானாக; புலம்பு போய்ச் சாயல் என்னும் புதுத்தளிர் ஈன்றது - அக்கொடி தனிமை நீங்கி மென்மை யென்னும் புதிய தளிரை ஈன்றது.

 

   (வி - ம்.) நலம், இயற்கை அழகு என்றும் கவின் என்றது ஒப்பனை யழகென்றும்கொள்க. பூங்கொடி போல்வாளாகிய தேசிகப்பாவை என்க. கலையினதியல்பு - நூல்கூறுமுறை. என்றது, யாழோர் மணத்தை.

( 192 )
1358 சாந்திடைக் குளித்த வெங்கட் பணைமுலைத் தாம மாலைப்
பூந்தொடி யரிவை பொய்கைப் பூமக ளனைய பொற்பின்
வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை யிவர்க ணாளு
மாய்ந்தடி பரவ வைகு மரிவையர்க் கநங்க னன்னான்.

   (இ - ள்.) அரிவையர்க்கு அநங்கன் அன்னான் - பெண்களுக்குக் காமன் போன்ற சீவகன்; சாந்திடைக் குளித்த வெங்கண் பணை முலைத்தாம மாலைப் பூந்தொடி அரிவை - சந்தனத்தின் இடையே முழுகிய விருப்பூட்டுங் கண்களையுடைய பருத்த முலைகளையும் ஒழுங்காகிய மாலையினையும் உடைய தேசிகப் பாவையும்; பொய்கைப் பூமகள் அனைய பொற்பின் - பொய்கையிலே மலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்ற அழகினையும்; வேந்து அடு குருதி வேற்கண் விளங்கு இழை - பகையரசை அடுகின்ற குருதியையுடைய வேலனைய கண்களையும் உடைய, விளக்கமான அணிகலன் புனைந்த பதுமையும்; இவர்கள் - (ஆகிய) இவர்கள்; நாளும் ஆய்ந்து அடிபரவ வைகும் - எப்போதும் ஆராய்ந்து தன் அடிகளை வணங்கத் தங்கினான்.

 

   (வி - ம்.) 'முலையினையும் மாலையினையும் பூமகளனைய பொற்பினையும் உடைய அரிவை' எனக் கூட்டிப் பதுமைக் காக்கி, 'வேந்து' தனபதி யெனக் கொண்டு, 'விளங்கிழை' திலோத்தமை யென்று