பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 77 

   ராயினார் - [நகரிற் பரத்தையர் சேரி உளதாதலின் ஊடல் தோன்றியது. மருதநிலத்தின் உரிப்பொருள் ஊடல்.] 'எஞ்சு பொருட்கிளவி செஞ்சொல் ஆயின் - பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்' (தொல். இடை - 36) என்பதனாற் 'குஞ்சிமேலும்' என உம்மை கொடாராயினார்.

( 105 )
135 தூம மேகம ழுந்துகிற் சேக்கைமேற்
காம மேநுகர் வார்தம காதலால்
யாம மும்பக லும்மறி யாமையாற்
பூமி மாநகர் பொன்னுல கொத்ததே.

   (இ - ள்.) தூமமே கமழும் துகில் சேக்கைமேல் காமமே நுகர்வார் - அகிற்புகை மணக்கும் வெள்ளிய துகிலிடப்பட்ட அணையின்மேற் காமத்தையே துய்ப்பவர்கள்; தம காதலால் யாமமும் பகலும் அறியாமையால் - தங்கள் காதலாலே இரவும் பகலும் அறியாததால் ; பூமி மாநகர் பொன்னுலகு ஒத்தது- உலகிடை அந்நகர் பொன்னுலகைப் போன்றது.

 

   (வி - ம்.) தூமமே : ஏகாரம், தேற்றம். காமமே : ஏகாரம், பிரிநிலை. 'யாமத்தும் எல்லையும்' (கலி. 139) என்றார் பிறரும். 'பூமியின்' 'பூமென் மாநகர்' என்றும் பாடம். பூ - வடமொழி

( 106 )
136 அரவு கான்றிட்ட வங்கதிர் மாமணி
யுரவு நீர்முத்து முள்ளுறுத் துள்ளன
விரவன் மாந்தர்க்கு மின்னவை யீவதோர்
புரவு பூண்டனர் பொன்னகர் மாந்தரே.

   (இ - ள்.) அரவு கான்றிட்ட அம்கதிர் மாமணி - அரவம் உழிழ்ந்த அழகிய ஒளிதரும் மாணிக்கமும்; உரவுநீர் முத்தும் உள்ளுறுத்து - கடலின் முத்தும் ஆகியவை உட்பட; இரவல் மாந்தர்க்கும் இன்னவை உள்ளன - இரக்கும் மக்களுக்கும் இவை உள்ளவாயின. (ஆதலால்) பொன்னகர் மாந்தரே ஈவதோர் புரவு பூண்டனர் - செல்வமிகும் அந்நகர மக்கள் கொடுக்கும் கொடையை மேற்கொண்டனர்.

 

   (வி - ம்.) 'இரவலரும் இல்லை: கொடுப்பவரும் இல்லை' என்பது குறிப்பு. இஃது இகழ்ச்சி. ஏகாரம் : எதிர்மறை. இனி, இன்னவை இரவல் மாந்தர்க்கும் உள்ளனவாய் இருத்தலிற் பின் மாந்தரே புரவு பூண்டார் என்றது உயிர் உறுப்பு முதலியன கொடுத்தற்குத் துணிந்தார் இவரே என்றுமாம் : ஏகாரம் : தேற்றம்.

 

   இச் செய்யுட்கு, பொருள்களுள் வைத்துக் கிடைத்தற்கரிய அரவு மணியையும் மிக வருந்திக்கொள்வதாகிய நீர்முத்தினையும்கூட இந்நகர மாந்தர் இரவலர்க்கு வழங்குவர் என்பது கருத்தாகக்கோடல் அமைவதாம்.

( 107 )