பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 796 

   இளமையும் இஃதே வடிவும் இஃதே எனச் சுட்டுச்சொல்லை ஈரிடத்தும் ஒட்டுக.

( 245 )
1411 நெய்கனிந் திருண்ட வைம்பா
  னெடுங்கணாள் காத லானை
யையிரு திங்க ளெல்லை
  யகப்படக் காண்பி ரிப்பாற்
பொய்யுரை யன்று காணீர்
  போமினம் போகி நுங்கண்
மையலங் களிற்று வேந்தன்
  மைந்தனுக் குரைமி னென்றான்.

   (இ - ள்.) நெய்கனிந்து இருண்ட ஐம்பால் நெடுங்கணாள் காதலானை - நெய் நிறைந்து கறுத்த ஐம்பாலையும் நெடுஞ்கண்களையும் உடையவளின் கணவனை; ஐயிரு திங்கள் எல்லை அகப்படக் காண்பிர் - பத்துத் திங்களின் அளவிலே அகப்படக் காண்பீர்; இப்பால் காணீர் - இவ் வெல்லைக்குள்ளே காணீர்; பொய் உரை அன்று - யான் கூறுவது பொய்ம்மொழி யன்று; போமின் - ஆகவே, இனித் திரும்பிச் செல்லுமின்; போகி நுங்கள் மையல்அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரைமின் என்றான் - சென்று நுங்கள், மயக்கமுற்ற களிற்றையுடைய வேந்தனுக்கும் அவன் மைந்தனுக்கும் உரைப்பீராக என்றான்.

 

   (வி - ம்.) ஏவலாளர், 'நும்போன்ற ஒருவன்' என்றே கூறினாராக, இவன், 'நெடுங்கணாள் காதலானை' எனவும், 'வேந்தனுக்கும் மைந்தனுக்கும்' எனவும் கணியொருவன் கூறுவதுபோலக் கூறினான், தான்கூறும் மொழி உண்மையென அவர்களுணர்ந்துபோய்க் கூறுதற்கு. ”ஐயிரு திங்கள் எல்லை அகப்பட' என்றது, பத்தாகிய எல்லைக்குள்ளே ஒரு திங்கள் குறைய என்றவாறு. எனவே. ஒன்பதாந் திங்களாயிற்று” என்பர் நச்சினார்க்கினியர். போமினம் : அம் : அசை.

( 246 )

பதுமையார் இலம்பகம் முற்றிற்று