பக்கம் எண் :

  797 

6. கேமசரியார் இலம்பகம்

 

(கதைச் சுருக்கம்)

 

   சுதஞ்சணன் கூறிய நெறி பற்றிச்சென்ற சீவகன் சித்திர கூடம் என்னும் சிறந்ததொரு தவப்பள்ளியை எய்தினன். ஆண்டுள்ள தாபதர்களோடு அளவளாவி அவர்க்கு அறவுரை பல கூறித் திருத்தினன். அப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் தக்க நாட்டிற் புகுந்தனன். அந்நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை எய்தினன்.

 

   இனி அந்நகரத்தில் வாழும் சுபத்திரன் என்னும் வணிகனுக்குக் கேமசரி என்னும் ஓர் அழகிய மகளிருந்தனள். அம்மகள் பிறந்தபொழுது சுபத்திரன் கணிகளை அழைத்து ”இவட்குக் கணவன் யாவன்?” என வினவினன். அக் கணிகள், ”நின்மகள் எவனைக் கண்டு நாணுகின்றனளோ! அவ்வாடவனே இவட்குக் கணவன் ஆகுவன். இவட்குப் பிற ஆடவரைக் காணுங்கால் நாணந் தோன்றமாட்டாது,” என உணர்த்தியிருந்தனர். இக் காரணத்தால் அவ்வணிகன் நாடொறுந் தன் கடைக்குவரும் அழகிய இளைஞரைத் தன்மனைக்கழைத்துச்சென்று விருந்தூட்டுவன், அத்தகையோருள் ஒருவரையும் கேமசரி கண்டு நாணமுற்றிலள். மணப்பருவம் கழிந்து விடுமோ என்று சுபத்திரன் வருந்தியிருந்தான்.

 

   சீவகன் ஊழ்வலியுண்மையால் சுபத்திரன் கடைக்குச் சென்றனன். இவனது எழிலும் இளமையும் கண்ட சுபத்திரன் வியப்புற்றனன். இவனையும் சுபத்திரன் தன்னில்லத்திற்கழைத்துச்சென்று விருந்தூட்டினன். சீவகனைக் கண்ட கேமசரி பெரிதும் நாணமுற்றனள். அவன்பாற் காதன்மிக்கு வருந்தா நின்றனள். அவ்வழி சுபத்திரன் சீவகனுக்குக் கேமசரியை மணம் செய்வித்தனன். அம்மங்கை நல்லாளுடன் சீவக நம்பி இரண்டு திங்கள் இன்புற்றிருந்தனன்.

 

   பின்னர்க் கேமசரி யறியாதபடி, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். வழியில் ஒருவனுக்கு அறவுரை பகர்ந்து தன் அணிகலன்களை அவனுக்கு வழங்கினன்; வழங்கி அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். கேமசரி பிரிவாற்றாது பெரும் பேதுற்றனள். அவள் தாயாகிய நிப்புதி அவளை அரிதில் தேற்ற ஒருவாறு தேறியிருந்தனள்.