பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 800 

1415 யுருவப் பூங்கொம் பொசியப்
  புல்லித் தீந்தேன் பருகி
யருகு வாய்விட் டார்ப்ப
  வண்ணன் மெல்லச் சென்றான்.

   (இ - ள்.) பருகுவாரின் புல்லி -நீரைப் பருகுவாரைப் போல ஆர்வமுறத் தழுவி; பயம் கண்மாறத் துறக்கும் - பொருள் மாறினவுடனே தம்மை அடைந்த ஆடவரை விட்டுப் பிரிகின்ற; முருகு விம்மு குழலார் போல -மணம் பொங்கும் கூந்தலையுடைய பரத்தயரைப்போல; மொய்கொள் தும்பி - செறிவுகொண்ட வண்டுகள்; உருவப் பூங்கொம்பு ஒசியப் புல்லித் தீம் தேன் பருகி - அழகிய மலர்க்கொடி சாயத் தழுவி இனிய தேனை நுகர்ந்து; வாய்விட்டு அருகு ஆர்ப்ப - தேன் வற்றியவுடனே மலர்க்கொடியை விட்டு அருகிலேயே தூற்றுவனபோல ஆரவாரிப்ப; அண்ணல் மெல்லச் சென்றான் - சீவகன் அதனைக் கண்டு மெல்லச் சென்றான்.

 

   (வி - ம்.) பருகுவார் என்னும் வினைக்குத்தகுதி பற்றி நீர் என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. பயம் - பொருள்: ஆகுபெயர். பயங்கண் மாறத் துறக்குங் குழலார் எனவே அவர் புல்லுவது பொருள் உளவாயபொழுதே என்பது பெற்றாம். அகத்தே அன்பில்லார் என்பது பட முருகுவிம்மு குழலார் என்றார். எனவே பொருட் பெண்டிர் என்றாராயிற்று.

 

   ”பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிர்” என்றார் பிறரும் (மணி.18 108-9.) அப் பழுவத்துட் புகாமல் சித்திரகூட நோக்கிச் சென்றான் என்பது தோன்றபுக்கான் என்னாது சென்றான் என்றார்.

( 4 )
1416 செல்வர் மனத்தி னோங்கித் திருவின் மாந்தர் நெஞ்சி
னெல்லை யிருளிற் றாகிப் பூந்தா தினிதி னொழுகிக்
கொல்லும் மரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற்
செல்லச் செல்ல வஃகு நெறிசோ் சிலம்பு சோ்ந்தான்.

   (இ - ள்.) செல்வர் மனத்தின் ஓங்கி - திருவுடையார் உள்ளம்போல மேல்நோக்கி; திரு இல் மாந்தர் நெஞ்சின் எல்லை இருளிற்று ஆகி - செல்வம் இல்லாதார் நெஞ்சுபோலப் பகலினும் இருளையுடையதாய்; பூந்தாது இனிதின் ஒழுகி - மரகந்தம் இனியதுபோல ஒழுகி; கொல்லும் அரவின் மயங்கி - கொல்லும் பாம்புபோலத் தலைமறைந்து; சிறியார் கொண்ட தொடர்பின் - கீழ்மக்கள் கொண்ட நட்பைப்போல; செல்லச் செல்ல அஃகும் நெறிசேர் - செல்லச்செல்லக் குறையும் வழிபொருந்திய ; சிலம்பு சேர்ந்தான் - மலையைச் சென்றடைத்தான்.