பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 802 

1418 கொய்தாமந் தாழ்ந்தொசிந்த
  குளிர்பூம்பிண்டிக் கோமானே
யிஃதேநின்சொ லியல்பென்றா
  லடியேனின்னைத் தொழுதேனே.

   (இ - ள்.) செய்தான் இருவினையின் பயத்தைச் சென்று சேரும் என்றி - இருவினையையுஞ் செய்த ஒருவன் அவ் வினையின் பயனைச் சென்று நுகரும் என்று கூறுகின்றாய் (அவ்வாறு கூறிய நீயே); அதன் பயத்தை எய்தான் பிறனே துய்த்தல் இயல்பு என்றி - இருவினைப் பயனைச் செய்தவனே அடையான், மற்றவன் நுகர்தலே இயற்கை என்றாய்; கொய்தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர்பூம்பிண்டிக் கோமானே - கொய்து தொடுத்த மாலை தங்கி நுடங்கும் தண்ணிய மலர்ப்பிண்டியின் நீழலில் எழுந்தருளிய இறைவனே!; இஃதே நின்சொல் இயல்பு என்றால் - இவ்வாறு இரண்டுபட்டிருக்கும் இதுவே நீ மொழியும் மொழிகளின் தன்மையென்றால்; அடியேன் நின்னைத் தொழுதேனே - அடியேன் அஞ்சி நின்னை வணங்குகின்றேன்.

 

   (வி - ம்.) இருவினை - நல்வினையுந் திவினையும். பயம் - பயன். அவையாவன - இன்பமுந் துன்பமும்.

 

   இஃதே என்னுஞ் சுட்டு இங்ஙனம் இரண்டுபட்டிருக்குமிதோ என்பதுபட நின்றது.

 

   உயிர் ஒன்றாதலின் செய்தவனே வினைப்பயனைத் துய்த்தல் இயல்பு என்றும், உயிர் ஒன்றாயினும் பல பிறப்பு எடுத்துப் பல உடம்புகளினாலும் அவ் வினைப்பயனைத் துய்த்தலின் பிறனே துய்த்தல் இயல்பு என்றும் கூறினார் என்க. என்றி : நிகழ்கால முன்னிலை ஒருமை முற்று.

( 7 )
1419 உண்டே தனதியல்பி
  னுணருங்காலை யுயிரென்றி
யுண்டாய வ்வவுயிரே
  பிறிதினில்லை யெனவுரைத்தி
வண்டார்த்து நாற்காதம்
  வண்ணமாலை சுமந்தொசிந்து
கொண்டேந்து பூம்பிண்டிக்
  கோமானின்னைத் தொழுதேனே.

   (இ - ள்.) உயிர் தனது இயல்பின் உணருங்காலை உண்டே என்றி - உயிர் தனது இயல்பால் உணர்ந்தால் உண்டே என்று கூறுகின்றாய்; உண்டாய அவ்வுயிரே பிறிதின் இல்லை என உரைத்தி - இருக்கின்றதாக உணரப்பட்ட அவ்வுயிரே மற்றொன்