பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 815 

தன்பால் அமைந்தது என்னும் இச்சொல்லோவியம் மிகவும் இனிதாதல் உணர்க.

 

   மாமை - அழகு. ஈண்டு அந்நாடு தெவிட்டாத காட்சியின் பமுடைத்தாதற்கு உவமை.

( 28 )
1440 தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
பூங்குழன் மடந்தையர் புனைந்த சாந்தமு
மாங்கெலா மகிற்புகை யளாய வாசமுந்
தாங்கலா றக்கநா டாய தென்பவே.

   (இ - ள்.) தேம் கயத்து அணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - இனிய கயத்தின் அழகிய மலர் வாய்விட்ட மணமும்; பூங்குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும் - மலர்க் கூந்தலையுடைய மாதர்கள் அணிந்த சந்தனமும்; அகில் புகை அளாய வாசமும் - அகிற்புகை கலந்த மணமும்; ஆங்குஎலாம் தாங்கலால் தக்கநாடு ஆயது என்ப - அங்கெல்லாம் தரித்தலின் தக்கநாடு என்னும் பெயர்த்தாயிற்றென்பர்.

 

   (வி - ம்.) தெகிழ்ந்த - நெகிழ்ந்த; மலர்ந்த என்றவாறு. தக்க நாடு - தகுதியுடைய நாடு; தகுதி -தாங்குதல். எனவே தக்க நாடென்பது அதற்குக் காரணப் பெயர் என்றவாறு.

 

   என்ப - என்று சான்றோர் கூறுவர்.

( 29 )
1441 சண்பக நறுமலர் மாலை நாறுசாந்
தொண்பழுக் காயினோ டுருவ மெல்லிலை
யுண்பத மியாவர்க்கு மூன மில்லது
வண்புகழ் நாட்டது வண்ண மின்னதே.

   (இ - ள்.) சண்பக நறுமலர் மாலை - சண்பகமலர்களாகிய மணமிகு மாலையும்; நாறு சாந்து - மணக்கும் சந்தனமும்; ஒண்பழுக்காயினோடு - சிறந்த பழுக்காயுடன்; உருவம் மெல்இலை - அழகிய வெற்றிலையும்; உண்பதம் - உண்ணும் உணவும் என இவை; யாவர்க்கும் ஊனம் இல்லது - எவருக்கும் குறைவின்றி அமைந்தது; வண்புகழ் நாட்டது வண்ணம் இன்னது - வளமிகும் புகழுற்ற தக்கநாட்டின் இயல்பு இத்தகையதே.

 

   (வி - ம்.) பழுக்காய் - பாக்கு. உருவம் - அழகு. மெல்லிலே : வினைத்தொகை; வெற்றிலை. உண்பதம் : வினைத்தொகை. நாறுசாந்து என்பதும் அது. ஒண்பழுக்காய், வண்புகழ் : பண்புத்தொகைகள்.

 

   மலர் முதலிய இன்னோரன்னவற்றால் ஊனம் இல்லது என்க. ஊனம் - குறைவு. வண்ணம் - இயல்பு.

( 30 )