பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 818 

   (இ - ள்.) பேரொலி வளநகர் - பேரொலியை உடைய அவ்வளமிகு நகரம்; இளையவர் எறிசுறவு - வீரர் எறியும் சுறா மீனாகவும்; ஏந்து பூங்கொடி மறிதிரை - ஏந்திய பூங்கொடி மறி திரையாகவும்; மாடம் மாக்கலம் - மாடங்கள் பெரிய மரக்கலமாகவும்; பெறல் அருந் திருவனார் அமுதம் - கிடைத்தற்கரிய திருவைப் போன்ற மகளிர் அமுதமாகவும்; அறைகடல் ஆயது என்ப - ஆரவாரமுடைய கடலாயிற் றென்ப.

 

   நகர், சுறவையும் திரையையும் மரக்கலங்களையும் அமுதத்தையும் உடையதாய்ப் பாற்கடலை ஒத்தது என்றவாறு. வீரர் எதிர்வாரை எறிதலின் சுறவினையும் கொடி காற்றால் அசைதலின் திரையினையும் மாடம் மாந்தரையும் சரக்குக்களையும் கொண்டிருத்தலின் கலத்தினையும் மகளிர் தங்காதலர் உயிர் தளிர்ப்ப முயங்கலின் அமிழ்தத்தினையும் உவமையாகக் கூறினார்.

 

   இத் தொடர் வேறுபட வந்த உவமவிசேடமாம் என்பர் நச்சினார்க்கினியர்.(தொல். உவ. 32)

( 35 )

வேறு

 
1447 மதியக டுரிஞ்சுஞ் சென்னி
  மாடநீண் மறுகு தோறும்
பொதியவிழ் மாலை வீழ்ந்து
  பொன்செய்நன் கலன்கள் சிந்தி
நிதியறை திறந்து நோக்கி
  யன்னதோர் நீர்மை யெய்திப்
புதியவர்க் கியங்க லாகாப்
  பொற்பொடு பொலிந்த தன்றே.

   (இ - ள்.) மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம்நீள் மறுகு தோறும் - திங்களின் நடுவைத் தேய்க்கும் உச்சியையுடைய மாடங்களையுடைய நீண்ட தெருக்கள்தோறும்; பொதி அவிழ் மாலை வீழ்ந்து - மயிர்முடி குலைதலின் முத்துமாலை வீழந்து; பொன்செய் நன்கலன்கள் சிந்தி - பொன்னால் இயற்றிய பேரணிகளும் சிந்துதலாலே; நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி - நிதியறையைத் திறந்து பார்த்தால் ஒத்ததொரு தன்மை பெற்று; புதியவர்க்கு இயங்கல் ஆகாப் பொற்பொடு பொலிந்தது - அச்சமுண்டாக்குதலின் புதியவர்க்குச் செல்லலாகாத அழகொடு விளக்கம் உற்றது.

 

   (வி - ம்.) உரிஞ்சும் - தேய்க்கும். மறுகு - தெரு. நிதியறை - கருவூலம். புதியவர் பொருள் கிடக்குமிடத்தே புகுதற்கு அஞ்சுதல் இயல்பாகலின் புதியவர்க்கு இயங்கலாகாப் பொற்பு என்றார். இதனால் அந்நகரத்துத் திருவுடைமை உணர்த்தப்பட்டது.

( 36 )