பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 825 

   (வி - ம்.) சிறுமி தந்தையும் பூணினானுமாகிய சுபத்திரன் என்க. செல்வன் : சீவகன். திருநகர்ச் சேட்பட்டான் என்றது, அவன் வருகையை உணர்ந்து தன்னகரத்தினின்றும் தொலைவிடத்திலேயே எதிர் சென்று கண்டு அழைத்து வந்தனன் என்பதுபட நின்றது.

( 47 )
1459 தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுட
ரொன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண்
மன்றல்கொண் மார்பினான் வந்தொ ரானிழ
னன்றுவந் திருந்தன னாதற் சிந்தியா.

   (இ - ள்.) தென்திசை முளைத்தது ஓர் கோலம் செஞ்சுடர் - தென் திசையிலே முளைத்ததாகிய ஓர் ஒப்பனையுறுஞ் சிவந்த ஞாயிறு; உத்தரம் ஒன்றி வருவது ஒத்து - வடதிசை நோக்கி நிலத்தே பொருந்தி வருவது போல; மன்றல் கொள் மார்பினான் வந்து - மணம் கொண்ட மார்பினானாகிய சீவகன் வந்து; ஒர் ஆல் நிழல் - ஓர் ஆலமரத்தின் நிழலிலே; நாதன் சிந்தியா நன்று உவந்து இருந்தனன் - அருகனைத் தியானித்தவாறு மிகவும் மகிழ்ந்திருந்தனன்.

 

   (வி - ம்.) இச் செய்யுளின்கண் சுபத்திரன் சீவகனை எதிர்ப்பட்ட இடமும் அவன் அவ்விடத்து இறைவணக்கஞ் செய்திருந்ததும் கூறுகின்றார்.

 

   நாதன் - இறைவன். சிந்தியா - சிந்தித்து. நன்று - பெரிதும். தியானித்தல் : நமோ அரஹந்தாணம் என்றுகூறி மந்திரத்தியானஞ் செய்தல்.

 

   வேற்று நாட்டின் சுவைகளை அறிந்து நுகரவேண்டும் என்று சீவகன் கூறியதற் கிசைந்த சுதஞ்சணன் இவனுக்கு ஊழ் வகையான் 'உறவு கொண்டு நுகர்ச்சி எய்தும் இடங்களை நாடி ஆண்டுச் சேறற்கு வழி கூறலின், வடதிசையிற் போதல் உளதாயிற்று. விசயமாதேவியைக் கண்டாற் பின்பு இராசமாபுரம் நோக்குவான்.

( 48 )
1460 குடைகவித் தனையது கோல மாமுடி
யடியிணை யாமையின் வடிவு கொண்டன
புடைதிரள் விலாவும்வில் வளைந்த பொற்பின
கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே.

   (இ - ள்.) கோலமாமுடி குடைகவித்தனையது - இவனுக்கு அழகிய பெருமைமிக்க தலையும் உச்சி சிறிது உயர்ந்து முறைமையுறத் தாழ்ந்து சுற்றொத்தலின் குடைப்புறத்தை யொக்கும்; அடியிணை ஆமையின் வடிவு கொண்டன - இரண்டு புறவடிகளும் ஆமையின் உருவத்தைக் கொண்டுள்ளன; புடை திரள் விலாவும் வில் வளைந்த பொற்பின - பக்கந்திரண்ட விலாக்களும் வில் வளைந்தாற் போன்ற அழகின; கண்ணின் வண்ணம் கடிகமழ் தாமரை - கண்ணின் தன்மை மணங்கமழும் தாமரை மலரின் தன்மை.