பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 837 

குங்குமம் இடப்பட்டனவாய்; அடிநிலம் பரந்து முத்து அணிந்த வெம்முலை - அடியிடம் பரந்து முத்துக்களை அணிந்த விருப்பூட்டும் முலைகள்; இடை நிலம் செகுப்பன - தம்மைச் சுமந்திருக்கின்ற இடையாகிய இடத்தைக் கெடுப்பன; என்னை என் செயா - யான் அகப்பட்டால் எத்துன்பத்தையும் செய்யும் அல்லவோ!

 

   (வி - ம்.) 'உலகில் தொழிலாற் கடியவர்கள் கட்டுண்ணப்படுவரென்றும், மனம் கொடியவர்கள் ஒன்றாற் புடையுண்ணப் படுவரென்றும் ஒரு பொருள் தோன்றிற்று' என்பார் நச்சினார்க்கினியர்.

 

   தம்மைத் தாங்குவதாகிய இடையினையே செகுப்பன; ஏதிலனாகிய என்னை என் செயா! எதுவுஞ்செய்யும் என்பது கருத்து.

( 72 )
1484 கரியவுள் வெறியன கட்டப் பட்டன
புரிவொடு புறத்திடப் பட்ட பூங்குழல்
தெரியின்மற் றென்செயா செய்ய நீண்டன
பெரியகண் போலவும் பேது செய்யுமே.

   (இ - ள்.) கரிய - கருநிறமுடையனவாய்; உள் வெறியன - உள்ளே மணமுடையனவாய்; கட்டப்பட்டன - கட்டி முடிக்கப்பட்டனவாய்; புரிவொடு புறத்து இடப்பட்ட பூங்குழல் - கடை குழைதலுடன் எருத்தத்தே கிடத்தப்பட்ட பூங்குழல்கள்; செய்ய நீண்டன - செய்யனவாய் நீண்டிருக்கின்றனவாகிய; பெரிய கண்போலவும் பேது செய்யும் - பெரிய கண்களைப்போலவும் வருத்தம் புரிகின்றன; தெரியின் என் செயா - ஆராயின் எல்லாஞ் செய்ய வல்லன.

 

   (வி - ம்.) செய்யனவும் நீண்டனவும் பெரியனவும் ஆகிய கண்கள் தம் நல்லியல்பிற்கு மாறாகத் தீங்கு செய்கின்றன; இங்ஙனமாகக் கரியனவும் வெறியனவும் புறத்தே தள்ளப்பட்டனவுமாகிய தீயவியல்புடைய ஐம்பால் அக்கண்போற் றீங்கு செய்தல் வியப்போ? ஆராயின் அவை எதுவும் அஞ்சாமற் செய்யும் என்பது கருத்து.

 

   இதன்கண் சிறப்புப் பொருளையே உவமையாக்கி இரண்டன் தீமையையும் விளக்குதல் உணர்க.

 

   கொடியனவாய், உள்ளே கள்ளின் மயக்குடையனவாய்க் கட்டுண்ணப்பட்டனவாய் எப்போதும் திருகுதலுடனே தம்மிடத்தினின்றும் கீழ்ப்போந்து கிடக்கும்படி புறத்திடப்பட்டனவாய் என்றும் ஒரு பொருள் தோன்றிற்று. உள்வெறியன - உள்ளே ஒன்றுமில்லதனவாய் எனினும் ஆம்.

( 73 )
1485 காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனுந்
தூதினாற் றுணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க்
கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்
கோதநீ ரமுதமு முலகும் விற்குமே.