பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 838 

   (இ - ள்.) காதன்மை கண்ணுளே அடக்கி - தன் வேட்கையையெல்லாம் தன் கண்ணுள்ளே கிடத்தி; கண் எனும் தூதினால் துணிபொருள் உணர்த்தி - அக் கண்ணென்கின்ற தூதாலே தான் எண்ணிய பொருளை எனக்கு அறிவித்து; தான் தமர்க்கு ஏதின்மைபடக் கரந்திட்ட - தான் தன் சுற்றத்தார்க்கு வேட்கை யாகிய காரணம் தோன்றாதவாறு மறைத்திட்ட; வாள் கண் நோக்கு - கேமசரியின் நோக்கம்; ஓதநீர் அமுதமும் உலகும் விற்கும் - கடலில் தோன்றிய அமுதத்தையும் உலகையும் தனக்கு விலையாகக் கொள்ளும்.

 

   (வி - ம்.) காதன்மை : காதற்றன்மை. கண்ணென்னும் தூது என்றது தானோக்காக்காற் றன்னை நோக்கும் களவு நோக்கத்தை. இஃதவள் உடம்பாட்டைத் தனக்குணர்த்துதலின் தூது எனப்பட்டது. தமர் அறியாமைப் பொருட்டு என்னை ஏதின்மைபடவும் நோக்கும். நோக்கு என்க.

 
”ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
 
காதலார் கண்ணே உள.” (குறள். 1099)
 

இச்செய்யுள் தேவரின் ஒப்பற்ற புலமைக்கோர் எடுத்துக்காட்டாகும்.

 

   'கண்ணுளே' என்பதற்குத் 'தன்னுளே' என்பதூஉம் பாடம்.

( 74 )

வேறு

 
1486 மிகுகொடா முத்தஞ் சூட்டி
  மீளிமை தீர்த்து மின்னு
நகுகொடா மணிக ணல்ல
  தெளித்துக்கொண் டெழுதி நன்பொன்
முகபடாம் வைப்ப வாட்செற்
  றழன்றுகண் கரிந்த முல்லைத்
தொகுகடாங் கோதை வெய்ய
  துணைமணி முலைக டாமே.

   (இ - ள்.) முல்லைத் தொகு கள்தாம் கோதை வெய்ய துணைமணி முலைகள் தாம் - முல்லைமலரின் திரண்ட தேன்பரக்கும் மாலையையுடைய இணையாகிய, மணியணிந்த வெய்யனவாகிய முலைகள்தாம்; கொடா மிகு மீளிமை தீர்த்து - ஒழிந்தவற்றிற்குக் கொடாத மிகுகின்ற வலிமையைத் தீர்த்து; முத்தம் சூட்டி - முத்துக்களை அணிந்து; மின்னும் நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக் கொண்டு எழுதி - மின்னும் தம்மை யிகழாத மணிகளில் நல்லனவற்றைக் கரைத்துக்கொண்டெழுதி; நன்பொன் முகபடாம் வைப்ப - நல்ல பொற்கச்சாகிய முகபடாத்தையும்