பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 840 

வேறு

 
1488 திருவிற்குங் கற்பகத் தெரியன் மாலையா
ருருவிற்கோர் விளக்கமா மொண்பொற் பூங்கொடி
முருகற்கு மநங்கற்கு மெனக்கு மொய்சடை
யொருவற்கும் பகைத்தியா லொருத்தி வண்ணமே.

   (இ - ள்.) கற்பகத்தெரியல் மாலையார் உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண்பொன் பூங்கொடி - கற்பத்தில் தெரிதலையுடைய மாலை பொருந்தியதோர் உருவிற்கு விளக்கமாம் பொற்பூங்கொடி; திருவிற்கும் முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய்சடை ஒருவற்கும் - திருமகளுக்கும் முருகனுக்கும் காமனுக்கும் எனக்கும் நெருங்கிய சடையையுடைய இறைவனுக்கும்; பகைத்தி - பகையாக இருக்கின்றாள்; ஒருத்தி வண்ணம் - ஒருத்தியின் வடிவிருந்தபடி என்னை!

 

   (வி - ம்.) திருமகளின் அழகையும், முருகன் வேலையும், காமன் வில்லையும், சீவகன் அறிவையும், இறைவன் பிறையையும் வாங்கியதாற்பகை யென்றான். வேல் கண்ணுக்கும், வில் புருவத்திற்கும், பிறை நெற்றிக்கும் உவமையாயின. 'திருவிற்கோர்' என்பதூஉம் பாடம். இனி பூங்கொடி ஒருத்தி திரு. முருகன், காமன், இறைவன் ஆகியோற்கு வடிவினாலேயே பகைத்தியாயினாள்; எனக்கு உயிர்க்கே பகைத்தியாயினாள் என்றுமாம்.

 

   திருவிற்கும் கற்பகத்தெரியலாகிய மாலையணியும் இந்திராணி முதலிய வானவ மகளிர்க்கும் அழகிற்கொரு விளக்கமாக அமைந்த கேமசரி எனினும் பொருந்தும். பூங்கொடி : கேமசரி. இறைவன் - சிவபெருமான். பகைத்தி - பகைமை யுடைவள்.

( 77 )
1489 கலைத்தொகை நலம்பல கடந்த காளைதா
னலத்தகை யவணல நினைப்ப நாய்கனு
மலைத்தொகை மதந்தவழ் யானை மன்னவ
னிலத்தவர்க் கறிவுற நெறியிற் செப்பினான்.

   (இ - ள்.) கலைத்தொகை நலம்பல கடந்த காளைதான் - கலைத்தொகுதிகளின் நலம் பலவற்றையும் அறிந்த சீவகன் தான்; நலத்தகையவள் நலம் நினைப்ப - தன்மேல் அன்பின் தகைமையையுடையவள் அழகினை இவ்வாறு நினைத்திருப்ப; நாய்கனும் - சுபத்திரனும்; மலைத்தொகை மதம் தவழ் யானை மன்னவன் நிலத்தவர்க்கு - மலைகளின் திரள் போன்ற மதம்பொருந்திய யானைகளையுடைய அரசனுக்கும் தன் சுற்றத்தவர்க்கும்; அறிவுற நெறியிற் செப்பினான் - தெரியுமாறு முறைப்படி அறிவித்தான்.

 

   (வி - ம்.) அரசன் செறிந்திருத்தலின் அவனுக்கு மணத்தினை அறிவித்தான்.