பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 844 

   (வி - ம்.) தாரினானும் கொம்பனாளும் ஆடியும் குற்றும் சூட்டியும் நுகர்ந்து செல்வார் என உம்மை விரித்தோதுக.

 

   இங்ஙனம் மாந்தர் நுகர்தற்குக்காரணம் முற்பிறப்பிலே செய்தநல் வினையே என்பார் விதியினான் மிக்கார் என்றும் வினைநலம் நுகர்ந்து செல்வார் என்றும் விதந்தோதினார்.

( 84 )
1496 பொழிந்துகு காதல் பூண்டு
  புல்லுகை விடாது செல்லக்
கழிந்தன விரண்டு திங்கள்
  காளையு மற்றோர் நாளாற்
பிழிந்துகொள் வனைய பெண்மைப்
  பெய்வளைத் தோளி தன்னோ
டழிந்துவீ ழருவிக் குன்றி
  லாய்மலர்க் காவு புக்கான்.

   (இ - ள்.) பொழிந்து உகு காதல் பூண்டு - நிறைந்து புறந்தோன்றுகின்ற காதலைப் பூண்டு; புல்லுகை விடாது செல்ல - இவ்வாறு முயங்கலைக் கைவிடாது போதர; இரண்டு திங்கள் கழிந்தன - இரண்டு திங்கள் கடந்தன; மற்றோர் நாளால் - பிறிதொரு நாளிலே; பிழிந்து கொள்வு அனைய பெண்மைப் பெய்வளைத்தோளி தன்னோடு காளையும் - வடித்துக்கொண்டாற் போலும் பெண்மையினையுடைய, வளையலணிந்த தோளியுடன் சீவகனும்; அழிந்து வீழ் அருவிக் குன்றில் ஆய் மலர்க் காவு புக்கான் - பெருகி வீழ்கின்ற அருவியையுடைய அழகிய மலர் நிறைந்த பொழிலிற் புகுந்தான்.

 

   (வி - ம்.) உவகை அகத்தே நிரம்பியவழி மெய்ப்பாடாகப் புறத்தார்க்கம் புலப்படுதலுண்மையின் பொழிந்துகு காதல் என்றார்.

 

   பூண்டு - மேற்கொண்டு. புல்லுகை - தழுவுதல். நாளால் - நாளில். சிறந்த பெண்மை நலத்தினும் பிழிந்தெடுத்துக்கொண்ட பெண்மை நலத்தையுடையாள் என்க. தோளி : கேமசரி.

( 85 )
1497 காஞ்சனக் கமுகு காய்பொற்
  கனிக்குலை வாழை சூழ்ந்து
பூஞ்சினை நாகந் தீம்பூ
  மரக்கருப் பூரச் சோலை
மாஞ்சினை மயில்க ளாடச்
  சண்பக மலர்கள் சிந்துந்
தீஞ்சுனை யருவிக் குன்றஞ்
  சீர்பெற வேறி னானே.