பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 856 

1517 நுனசீ றடிநோ வநடந் துசெலே
லெனதா வியகத் துறைவா யெனுநீ
புனைதா ரவனே பொயுரைத் தனையால்
வினையே னொழியத் தனியே கினையே.

   (இ - ள்.) புனை தாரவனே - அணிந்த மாலையாய்!; வினையேன் ஒழியத் தனி ஏகினை - தீவினையேன் இங்கிருப்ப நீ தனியே ஏகினாய் (ஆதலின); நுன சீறடி நோவ நடந்து செலேல் - நின்னுடைய சிற்றடி நோவ நடந்து செல்லாதே; எனது ஆவி அகத்து உறைவாய் - என்னுடைய உயிரகத்தே வாழ்வாய்!; எனும் நீ பொய் உரைத்தனை - என்று கூறும் நீ பொய்யுரைத்தனை.

   (வி - ம்.) அடிநோவப் பொறாத நீ யான் இவ்வளவும் நோதலைப் பொறுப்பாயோ. பொறாயன்றே; எனவே, நீ கூறியது பொய்யே என்பது கருத்து.

( 106 )
1518 பருமுத் துறையும் பணைவெம் முலைநின்
றிருமுத் தகலந் திளையா தமையா
வெரிமொய்த் தனலு மிகல்வே லெரிபுண்
மருமத் தனலும் வகைசெய் தனையே.

   (இ - ள்.) பருமுத்து உறையும் பணை வெம்முலை - (ஐய, முன்னர் நீ இவை பரிய முத்துவடம் தங்குதற்கு இடமான பருத்தமுலை என்று பாராட்டினை அன்றோ) அம்முலைகளே இப்போதும் பரிய முத்துக்களை ஒத்த கண்ணீர்த் துளிகள் உறைதற் கிடமான வெப்பமுடையன ஆயின கண்டாய்; நின் திருமுத்து அகலம் திளையாது அமையா - இனி அவைதானும் அழகிய முத்தணிந்த நினது மார்பிடத்தில் முயங்கினால் உய்வனவல்லது முயங்காவிடின் உய்யா; எரிமொய்த்து அனலும் இகல் வேல் - இவ்வாற்றால் நீ தீ மொய்த்ததனால் காய்ந்ததொரு வேல்; எரிபுண் மருமத்து அனலும் வகை செய்தனை - தீப்பட்ட பழம் புண்ணையுடைய மார்பிலே புகுந்து சுடுவதனை ஒத்த ஒரு துன்பத்தினை உண்டாக்கிவிட்டனை.

   (வி - ம்.) 'பருமுத்து உறையும் பணைவெம்முலை' என அவன் முன் கூறியதை அவள் இப்போது கொண்டு கூறுகிறாள். முத்து - முத்துவடம்: கண்ணீர், பணை - பருமை; வெம்மை - விருப்பம்; காமத்தீயால் வெதும்புதல்.

   முன்னர் முயங்கிப் பிரிந்த பிரிவு புண்ணிற்கும், இப்போது முன்னின்று முயக்கங்கொடாத நிலை வேலிற்கும் உவமை. இத்துணையும் 'எதிர்பெய்து பரிதல்' 'உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்' (தொல். பொருளியல்- 9) என்னும் சூத்திர விதியால் முலையை இங்ஙனம் கூறினாள்.

( 107 )