பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 861 

வேறு

1527 மல்லுறை யலங்கன் மார்பன்
  பிரிவெனு மெரியுள் வீழ்ந்து
கல்லுறை நாகு வேய்த்தோட்
  கதிர்மணி முறுவற் செவ்வாய்
வில்லுறை புருவ மாதர்
  வெந்தனள் கிடப்ப மின்றோ
யில்லுறை தெய்வ நோக்கி
  யிரங்கிநின் றுரைக்கு மன்றே.

   (இ - ள்.) கல்உறை நாகு வேய்த்தோள் - மலையிடத்தே நின்ற இளைய வேய்போலும் தோளையும்; கதிர்மணி முறுவல் செவ்வாய் - ஒளிபொருந்திய முத்தனைய பற்களையுடைய செவ்வாயையும்; வில்உறை புருவம் மாதர் - வில்லைப்போன்ற புருவத்தையும் உடைய கேமசரி; மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து - மற்றொழில் பொருந்திய, மாலையணிந்த சீவகனுடைய பிரிவாகிய தீயில் வீழ்ந்து; வெந்தனள் கிடப்ப - வெந்து கிடக்கும்போது; மின் தோய் இல் உறை தெய்வம் நோக்கி - ஒளிபொருந்திய அவ் வீட்டில் வாழும் தெய்வம் பார்த்து; இரங்கி நின்று உரைக்கும் - இரக்கத்துடன் நின்று கூறும்.

   (வி - ம்.) இதுமுதல் மூன்று செய்யுள் இல்லுறை தெய்வங் கூறிய இரக்க மொழிகள்.

   மல் - ஒருவகைப் போர்த்தொழில். இஃது அத்தொழில் வன்மையைக் குறித்து நின்றது. நாகுவேய் - இளமையுடைய மூங்கில். கதிர் மணி என்றது ஈண்டு முத்தினை. வெந்தனள் : முற்றெச்சம்.

( 116 )
1528 புண்ணவாம் புலவு வாட்கைப்
  பொலன்கழற் புனைந்த பைந்தார்
கண்ணவாம் வனப்பி னானைக்
  காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப்
  படாமுலைப் பரவை யல்குற்
பெண்ணவா நிற்கு மென்றாற்
  பிணையனாட் குய்த லுண்டோ.

   (இ - ள்.) புண் அவாம் புலவு வாள் கை - புண்ணை விரும்பும் புலால் கமழும் வாளேந்திய கையையும்; பொலன் கழல் - பொற்கழலையும்; புனைந்த பைந்தார் - தொடுத்த புதிய மாலையையும் உடைய; கண் அவாம் வனப்பினானை - கண் விரும்பும் அழ