பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 872 

   (இ - ள்.) ஒப்பான் ஒரு மகனே - ஒழுக்கமுடைய அவ்வொரு மகனே; நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன - நான்கு தாய்மாரது ஒரு வயிற்றிலே பிறந்தான் என்ற கூறினானாக; நம்பிபோல் உலகில் இனியார் யார் என்னப் பெருஞ்சான்றோன் நக்கான் - இந்த நம்பியைப்போல் உலகினில் இனியார் யாவரென்று கூறி அறிவில்லாதவன் நகைத்தான்; மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவிக் கேட்பேன் - (நகைத்தவன் பிறகு) அறிவு மிக்கவன் கூறிய மொழியும் மிக்கது போலே யிராநின்றது, யான் வினவிக்கேட்பேன் (என்று கருதி); தக்காய் குறித்தது உரை என்றான் - நல்லோனே! நீ கூறியதன் கருத்தை விளக்குக என்று வினவினான்; உரைப்பத் தான் கேட்கின்றான் - அவனுரைப்பத் தான் கேளாநின்றான்.

   (வி - ம்.) பிறந்தான் - என்ன பிறந்தான் என்று கூறினானாகக் கருதி நக்கான் என்க. பெருஞ்சான்றோன் என்றது குறிப்புமொழி - அறிவிலாதான் என்றவாறு.

   வினவிக் கேட்பேன் : ஒரு சொல். குறித்தது : நின் கூற்றாற் குறிக்கப்பட்ட பொருள்.

( 133 )
1545 நற்றானஞ் சீல நடுங்காத்
  தவமறிவர் சிறப்பிந் நான்கு
மற்றாங்குச் சொன்ன மனைவியரிந்
  நால்வரவர் வயிற்றுட் டோன்றி
யுற்றா னொருமகனே மேற்கதிக்குக்
  கொண்டுபோ முரவோன் றன்னைப்
பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார்
  பிறர்மக்கள் பிறரே கண்டீர்.

   (இ - ள்.) நல் தானம் சீலம் நடுங்காத் தவம் அறிவர் சிறப்பு இந்நான்கும் - நல்ல தானமும் ஒழுக்கமும் அசைவில்லாத தவமும் இறைவர் வழிபாடும் ஆகிய இந்த நான்கும்; ஆங்குச் சொன்ன மனைவியர் - முன் கூறிய மனைவியர்; இந்நால்வரவர் வயிற்றுள் தோன்றி - இந்நால்வர் வயிற்றினும் பிறந்து; உற்றான் ஒரு மகனே மேற்கதிக்குக் கொண்டு போம் உரவோன் - பயன் தருவானாகிய நல்வினை யென்கின்ற அவ்வொரு மகனே உயர்கதிக்குக் கொண்டு போவானாகிய உரவோன்; தன்னைப் பெற்றார் மகப்பெற்றார்- அவனைப் பெற்றவரே மகவைப்பெற்றவராவார்; அல்லாதார் பிறர் - மற்றோர் மகப்பெறார் ஆவர்; மக்கள் பிறரே கண்டீர் - பெற்ற மக்களும் அவர் மக்களல்லர் கண்டீர்.

   (வி - ம்.) நால்வரவர் என்புழி அவர் என்பது வாளா பகுதிப் பொருளாய் நின்றது. மேற் கதிக்குக் கொண்டுபோம் உரவோம் என்