பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 876 

   (இ - ள்.) வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் - அயலார் இல்லாத நும் உறவினர் ஊருக்கே சென்றாலும்; வெகுண்டீர் போல ஆற்று உணாக்கொள்ளாது அடிபுறத்து வைப்பீரே அல்லிர் போலும் - அவருடனே சினந்து ஆண்டுச் செல்லாதீர் போலப் பொதிசோறு கைக்கொள்ளாமற் புறத்தே ஓர் அடியிட்டிடீர் (இத்தன்மையரான நீவிர்); கூற்றம் கொண்டு ஓடத்தமியே கொடுநெறிக்கண் செல்லும் போழ்தின் - கூற்றுவன் நும்மைக் கட்டிக்கொண்டு ஓடத் தனியே கொடிய நெறியிலே செல்லும்போது; ஆற்று உணாக் கொள்ளீர் - (உண்ணும் ஊணுக்குப்) பொதிசோறு இப்போதே தேரடிக்கொள்கின்றிலீர் (ஆதலின்); அழகலால் அறிவு ஒன்றும் இலிரே போலும் - அழகன்றி அறிவு சிறிதும் உடையீர் அல்லீர் போலும்!

   (வி - ம்.) 'வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே' என்றதனால் நுமரில்லா வேற்றுவர் ஊர்க்கே கூற்றங்கொண்டோட எனவும், 'கொடு நெறிக்கண்' என்றதனால், நுமரூர்க்கு நன்னெறிக்கண் செல்லினும் எனவும் விரித்தோதுக. அறிவொன்றும் என்புழி ஒன்றும் என்பது சிறிதும் என்பதுபட நின்றது.

   வைப்பீரே யல்லீர், இலிரே என வினைமுடிவு செய்க : இன், ஏழனுருபாதல் புறனடையாற் கொள்க. ஏ : அசை. போலும் : உரையசை.

( 139 )
1551 அளைவது காம மடுநறவு
  நெய்யொழுகு மூனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீ
  ரிவைமூன்றும் விடுமி னென்றாற்
றளையவிழ் கோதையார் தாமஞ்சோ்
  வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்
துறைய வுறுதி யுரைப்பாரை
  யோஒபாவ முணரா ரேகாண்.

   (இ - ள்.) அளைவது காமம் அடுநறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னே - தோய்வதாகிய காமத்தானும் துன்புறுத்தும் கள்ளானும் நெய்ஒழுகும் ஊனானும் பின்னர்; விளைவது தீ வினையே கண்டீர் - உண்டாகும் பயன் தீவினையே என்றறிவீர்; இவை மூன்றும் விடுமின் என்றால் - இவை மூன்றையும் விடுங்கோள் என்று பிறர்க்குக் கூறினால்; தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்து - முறுக் கவிழ்ந்த மலர் மாலையாரின் வெவ்விய முலைபோற் பொருமிக் கண்சிவக்கச் சினந்து; உளைய உறுதி உரைப்பாரை உணரார்காண் - தாம் வருந்த நன்மை கூறுவோரை அறியாராயினார்காண்!; ஓ! பாவம் - ஓ! இஃதொரு பாவம் இருந்தபடி என்!