பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 878 

1553 செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்
  கட்டுரையாற் குறித்தவெல்லாம்
பொய்யே பொருளுரையா முன்னே
  கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்.

   (இ - ள்.) கையால் பொதித் துணையே காட்ட - (இறக்கும் நிலையிலுள்ள ஒருவன்) மொழியின்றிக் கையாலே பொருள் திரளின் அளவைக் காட்டினானாக; கயல் கண்ணாள் அதனைக் காட்டாள் - கயல்போலும் கண்ணாளாகிய மனைவி அதனைக் கட்டாளாய்; ஐயா விளாம்பழமே என்கின்றீர் - ஐயனே! விளாம்பழமே வேண்டும் என்கின்றீர்; ஆங்கு அதற்குப் பருவம் அன்று - அது தருதற்கு விக்குள் வந்து அடுத்திருப்பதாற் பருவம் ஆகாது; என் செய்கோ என - என் செய்வேன் என்று; சிறந்தாள் போல் சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம் - சிறந்தவளைப்போல நடித்துச் சிறவாத கட்டுரையினாலே, அவன் குறித்த பிறவற்றிற் கெல்லாமும்; பொய்யே பொருளுரையா முன்னே - பொய்ப் பொருள் கூறாமுன்னமே; கொடுத்து உண்டல் புரிமின் - கொடுத்து உண்பதை விரும்புங்கோள்.

   (வி - ம்.) உரையாடாவண்ணம் ”நாச்செற்று விக்குள்மேல்” வந்தமையின் பொதித்துணையைக் கையாற் கார்ட்டினன் என்பது கருத்து.

   அதனை - அப்பொற்பொதியினை. பருவம் - உண்ணுதற்கேற்ற செவ்வி. சிறந்தாள் போல் என்றது சிறவாதவளாயிருந்தும் என்பது பட நின்றது. செய்கு : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று.

   இவ்வாறு நீயிர் ஈட்டியவற்றைக் கொன்னே இழப்பதன் முன்னே கொடுத்துண்மின் என்றவாறு.

( 142 )

வேறு

1554 பனிமதி யின்கதிர் பருகு மாம்பல்போன்
முனிமதி முகத்தியர் முறுவ னம்பினார்
துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங்
கனியநின் றாடுவர் கடையில் காலமே.

   (இ - ள்.) பனிமதி கதிர் பருகும் ஆம்பல்போல் - குளிர்ந்த திங்களின் கதிரை விரும்பிப் பருகும் அல்லிபோன்று; மதிமுனி முகத்தியர் முறுவல் நம்பினோர் - திங்களை மாறுபடும் முகமுடைய மங்கையரின் முறுவலுடைய வாயை விரும்பினோர்; துனிவளர்கதிகளுள் தோன்றி - துன்பந்தரும் தீய கதிகளிலே தோன்றி; கடைஇல் காலம் நாடகம் கனிய நின்று ஆடுவர் - அளவில்லாத காலமாக, வெவ்வேறுடம்பெடுத்து முற்றத்திரிவர்.