பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 88 

தின் ஆரழற் சீற்றத்தன்” என்றார். அச்சம் உற்றடைந்தார்க்கு என்றமையான் செருக்குற்றுப் பகைத்தார்க்கு நாகச் சீற்றத்தன் என்று வருவித்தோதுக. ஆரழற்சீற்றத்தன் என்றதனால் அவன் பேராண்மை விதந்தோதப்பட்டது. அடைந்தார்க் கமிர்தன்னவன் என்றதனால் அதன் எஃகாகிய ஊராண்மை விதந்தோதப்பட்டது.என்னை ?

 
  ”பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்  
  ஊராண்மை மற்றதன் எஃகு” (குறள், 773)  

   என்பவாகலான் என்க.

( 128 )
158 வண்கை யாற்கலி மாற்றிவை வேலினாற்
றிண்டி றற்றெவ்வர் தோ்த்தொகை மாற்றினா
னுண்க லைக்கிட னாய்த்திரு மாமகள்
கண்க ளுக்கிட னாங்கடி மார்பனே.

   (இ - ள்.) திருமாமகள் கண்களுக்கு இடன்ஆம் கடி மார்பன் - திருமகள் கண்கள் வேறிடம் நோக்காமல் நோக்கும் இடமாகிய புதுமை நிறைந்த மார்பனாகிய அவன்; நுண்கலைக்கு இடன் ஆய் - நுண்ணிய கலைகளுக்கு இருப்பிடமாகி; வண்கையால் கலி மாற்றி - வண்மையுடைய கையினால் வறுமையை நீக்கி; வைவேலினால் திண்திறல் தெவ்வர் தேர்த்தொகை மாற்றினான் - கூறிய வேலினால் திண்ணிய திறலையுடைய பகைவரின் தேர்த்திரளை நீக்கினான்.

 

   நுண்கலை என்றது , இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், என்னும் ஐந்தனையும். இவை கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணர்வன வாகலின் நுண்கலை எனப்பட்டன.

( 129 )
159 கோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடை
யோத நீருல கொப்ப நிழற்றலால்
தாதை யேயவன் தாணிழற் றங்கிய
காத லாற்களிக் கின்றதிவ் வையமே.

   (இ - ள்.) கோதை நித்திலம் சூழ்குளிர் வெண்குடை - பூமாலையும் முத்துமாலையும் சூழ்ந்த குளிர்ந்த வெண்குடையால்; ஓதம்நீர் உலகுஒப்ப நிழற்றலால் - கடல்சூழ்ந்த உலகை ஒப்ப நிழற்படுத்தலால்; தாதையே (அவ்வரசன்) உலகிற்குத் தந்தையே ஆயினான்; அவன்தாள் நிழல்தங்கிய - அவன் தாளின் நிழலிலே வாழ்வதற்கு; இவ் வையம் காதலாற் களிக்கின்றது - இவ்வுலகம் அவன்மேல் வைத்த அன்பினாற் களிப்புறுகின்றது.

 

   (வி - ம்.) கோதை நித்திலம் : உம்மைத்தொகை . ஒப்ப-எல்லார்க்கும் ஒப்ப. தங்கிய : செய்யிய என்னும் எதிர்கால வினையெச்சம்.