பக்கம் எண் :

  881 

7. கனகமாலையார் இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

   இங்ஙனம் சென்ற சீவகன் மத்திம தேயத்துள்ள ஏமமாபுரம் என்னும் நகரத்தின் பாங்கருள்ள ஒரு பூம்பொழிலை எய்தினன். அப்பொழிலின் கண்ணுள்ள பூம்பொய்கைத் தடங்கரையிலமர்ந்து காந்தருவதத்தை முதலியோரை நினைந்து ஆற்றாமையான் வருந்தியிருந்தான். அப்பொழுது அந் நகரத்து வேந்தன் மகன் விசயன் என்பான் அவண் வந்து சீவகனைக் கண்டனன். அவனோடு ஊர் முதலியன வினவி அளவளாவினன். சீவகன் தன் ஊர் முதலியவற்றை உண்மை வகையானன்றியுரைத்தனன். அப் பொழிலின்கண் உள்ள ஒரு தேமாங்கனியை வீழ்த்தும் பொருட்டு அவ் விசயன் பன்முறையும் கணைகளை ஏவியும் அக்கனி வீழ்ந்திலது. அதுகண்ட சீவகன் அவன் வியப்புறும்படி ஒரே கணையால் வீழ்த்தித் தன் வில் வன்மையை அவனுக்குக் காட்டினன்.

   விசயன் சீவகனைத் தன் தந்தையிடம் அழைத்தேகினன். அவ் வரசன் சீவகனுடைய வித்தைச் சிறப்பை யுணர்ந்து தன் மக்களாகிய விசயன் முதலிய ஐவர்க்கும் சீவகனை ஆசிரியனாக்கினன். அவர்களும் சீவகன்பாற் பயின்று மேன்மை யெய்தினர். ஏமமாபுரத்து மன்னனாகிய அத்தடமித்தன் சீவகன் தன்னகரத்தினின்றும் பிரியாதிருக்கும்பொருட்டுத் தன் மகளாகிய கனகமாலையையும் அவனுக்குத் திருமணஞ் செய்வித்தனன். சீவகன் இவ்வாறு ஏமமாபுரத்தில் இன்புற்றிருந்தான்.

   இனி, இராசமாபுரத்தே நந்தட்டன் முதலியோர் சீவகன் நிலையினை உணராராய்ப் பெரிதும் துன்புற்றனர். நாடெங்குந்தேடியும் காண்கிலர். ஒருநாள் நந்தட்டன் காந்தருவதத்தையின்பாற் சென்று சீவகனைப் பற்றி வினவினான். அவள் தன் வித்தை வன்மையால் சீவகன் ஏமமாபுரத்தில் கனகமாலையோடு இன்புற்றிருத்தலை நந்தட்டனுக்குக் கண்கூடாகக் காட்டினள். பின்னரும் அவள் தனது வித்தை வன்மையால் நந்தட்டனைச் சீவகன் இருக்குமிடத்தே சேரும்படி செய்தனள். சீவகன் நந்தட்டனைக் கண்டு மகிழ்ந்தான். அவனோடு அந் நகரத்தே பின்னரும் உறைந்தனன்,

   இனி, சீவகனுடைய தோழன்மார் சீவகன் செய்தியைக் காந்தருவ தத்தையாலுணர்ந்து அவனிருக்கு மிடத்திற்கு மறவர்