பலரோடும் செல்லலாயினர். அவர்கள் செல்லுநெறியில் இருந்ததொரு தவப் பள்ளியின் மருங்கே தங்கினர். அத்தவப் பள்ளியே விசயை நோற்றிருக்கும் பள்ளியாகும். விசயை அவர்களை நீவிர்யாவர்? எவ்வூரீர்? யாண்டுச் செல்கின்றீர்? என வினவினள். அவட்கு விடை கூறிய தேவதத்தன், சீவகன் வரலாறும் கூறும்படி யாயிற்று. அவன் கட்டியங்காரன் சீவகனைக் கொல்லக் கருதி என்று சொல்லும்பொருட்டுச் சீவகனைக் கொல்ல என்ற வளவிலே விசயை மூர்ச்சையுற்று விழுந்தாள். இந் நிகழ்ச்சியால் தோழன்மார் இவரே சீவகனுடைய நற்றாய் என்றும் சீவகன் இறைமகன் என்றும் அறிந்து கொண்டனர். சீவகன் இறவாதிருத்தலை விசயைக்கு விளக்கிக் கூறினர். விசயை சீவகனை நினைந்து பலவாறாகப் புலம்பினாள். தோழன்மாரை நோக்கி ”அன்பரீர்! சீவகசாமியை என்பால் அழைத்து வம்மின்,” என்று இரந்தனள். தோழர்கள் அவளை வணங்கி அங்ஙனமே அழைத்து வருவதாக வுணர்த்தி அவளைத் தேற்றி விடை பெற்றுச் சென்றனர்.
|