|
(இ - ள்.) இரங்கும் மேகலை அல்குல் இன்கனித்தொண்டை அம் துவர் வாய் - ஒலிக்கும் மேகலை தவழும் அல்குலையும் இனிய கொவ்வைக் கனிபோன்ற அழகிய சிவந்த வாயையும் உடைய; அரங்கக் கூத்திகண் அன்பின் - அரங்கில் ஆடும் பரத்தையினிடம் வைத்த அன்பினால்; மனையவள் துறந்து செல்பவர்போல் - இல்லாளை விட்டுச் செல்பவர் போல; பரந்த தீ புனல் மருதம் பற்றுவிட்டு - பரவிய இனிய நீரையுடைய மருத நிலத் தொடர்பை விட்டு; இனம் மயில் அகவும் மரம் கொல் யானையின் மதம் நாறு அருஞ்சுரம் அவன் செலற்கு எழுந்தான் - திரளான மயில்கள் கூவுகின்றதும், மரத்தைப் பிளக்கும் யானைகளின் மதம் கமழுகின்றதுமான அரிய காட்டுவழியிலே சீவகன் செல்வதற்குப் புறப்பட்டான்.
|