பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 898 

   யெச்சம். துயின்ற கற்பு, அஃதாவது தங்கிய கற்பென்க, துணைவி - மனைவி.

( 24 )
1581 தாயிலாக் குழவி போலச்
  சாதுய ரெய்து கின்றேன்
வேயுலாந் தோளி னார்தம்
  விழுத்துணைக் கேள்வ நிற்கண்
டாயினேன் றுறக்கம் பெற்றே
  னளித்தரு ளாது விட்டாற்
றீயினு ளமிர்தம் பெய்தாங்
  கென்னுயிர் செகுப்ப லென்றாள்.

   (இ - ள்.) வேய் உலாம் தோளினார் தம் விழுத்துணைக் கேள்வ! - மூங்கிலனைய தோளையுடைய பெண்களின் சிறந்த துணையாகிய கேள்வனே!; தாய் இலாக் குழவி போலச் சாதுயர் எய்துகின்றேன் - (நின்னைக் காணும் வரை) தாயை இழந்த குழவிபோல இரந்துபடுதற்குரிய துயரத்தை அடைகின்ற நான்; நின் கண்டு துறக்கம் பெற்றேன் ஆயினேன் - நின்னைப் பார்த்தவுடன் துறக்கம் பெற்றேன் போல ஆயினேன்; அளித்து அருளாது விட்டால் - (இனி என்னை) ஆதரித்து அருளாமல் விட்டால்; தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள் - நெருப்பிலே அமிர்தத்தைப் பெய்தாற்போல என் உயிரைக் காமத் தீயிலே பெய்து கெடுப்பேன் என்றாள்.

   (வி - ம்.) உலாம் : உவமைச் சொல். அவன் தோற்றம் துறவி போல இன்மையின், 'தோளினார் துணைவ' என்றாள்.

   சாதுயர் - சாங்காலத்துண்டாகும் துயர்போன்ற துயர். வேய் - மூங்கில். துறக்கம் பெற்றேனாயினேன் என மாறுக. தீ - காமத்திற்குவமை. காமத்துன்பத்தானே இறந்துபடுதல் ஒருதலை என்பது கருத்து.

( 25 )
1582 மணியெழு வனைய தோளும்
  வரையென வகன்ற மார்புந்
தணிவருங் கயத்துப் பூத்த
  தாமரை யானைய கண்ணும்
பணிவரும் பருதி யன்ன
  முகமுமென் றயர்ந்து காமப்
பிணியெழுந் தவலிக் கின்ற
  பேதைநீ கேளி தென்றான்.