பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 899 

   (இ - ள்.) மணி எழு அனைய தோளும் - மணி புனைந்த தூணனைய தோள்களும்; வரை என அகன்ற மாப்பும் - மலை போலப் பரந்த மார்பும்; தணிவு அருங்கயத்துப் பூத்த தாமரை அனைய கண்ணும் - வற்றாத குளத்திலே மலர்ந்த தாமரை மலர் போன்ற கண்களும்; பணிவு அரும் பருதி அன்ன முகமும் என்று அயர்ந்து - பணிதல் இல்லாத ஞாயிறு போன்ற முகமும் என்று எண்ணித் தளர்ந்து; காமப் பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை - காம நோய் தோன்றி வருந்தும் பேதையே!; நீ இது கேள் என்றான் - நீ இதனைக் கேட்பாயாக என்றுரைக்கின்றனன்.

   (வி - ம்.) மணி என்பது தொடங்கி முகமும் என்னுந் துணையும் சீவகன் அவள் கூற்றைக்கொண்டு கூறியபடியாம். மணிஎழு - மணியிழைத்த தூண். பருதி - ஞாயிறு. பேதை : விளி. இது கேள் என மாறுக.

( 26 )
1583 போதொடு நான மூழ்கிப்
  பூம்புகை தவழ்ந்து முல்லைக்
கோதைகண் படுக்குங் கூந்தல்
  குரைவளி பித்தோ டையே
யேதஞ்செய் மலங்க ணெய்த்தோ
  ரிறைச்சியென் பீருண் மூளை
கோதஞ்செய் குடர்கள் புன்றோ
  னரம்பொடு வழும்பி தென்றான்.

   (இ - ள்.) போதொடு நானம் மூழ்கி - மலரிலும் புழுகிலும் முழுகி; பூம் புகை தவழ்ந்து - அழகிய அகிற் புகை கமழ்ந்து; முல்லைக் கோதை கண்படுக்கும் கூந்தல் - முல்லைமலர்மாலை துயிலும் கூந்தலாய்!; குரை வளி பித்தோடு ஐ ஏய் - ஒலிக்கும் வாதமும் பித்தமும் சிலேற்பனமும் பொருந்திய; ஏதம் செய் மலங்கள் நெய்ததோர் இறைச்சி என்பு ஈருள் மூளைகோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பு இது என்றான் - குற்றஞ் செய்யும் மலங்களும் குருதியும் ஊனும் என்பும் ஈரலும் மூளையும் குற்றம் புரியும் குடர்களும் இழிந்த தோலும் நரம்பும் வழும்பும் ஆக இருக்கும் இவ்வுடம்பு என்றான்.

   (வி - ம்.) பூ முதலியவற்றாற் கூந்தல் நன்றாயிற்று என்றான்.

   எழுவும் வரையும் தாமரையும் பருதியும் என்று தன் உறுப்புக்களைப் பாராட்டினாட்கு இவை அன்னவல்ல; மெய்ம்மை நோக்கின் வளியும், பித்தும், ஐயும், இயைந்த மலமும், குருதியும், இறைச்சியும், என்பும், மூளையும், குடரும், தோலும், நரம்பு மேகாண் என்று தெளிந்த படியாம். கூந்தல், பன்மொழித்தொடரிற் பிறந்த அன்மொழித ்தோகை.

( 27 )