பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 901 

வைத்தால் - புருவம் கண் மூக்கு இவற்றை நன்றாக எழுதி வைத்தால்; கருதுவது அங்கு ஒன்று உண்டோ? - நன்றெனக் கருதுவதொரு பொருள் இல்லையே! இறைச்சிப் போர் இதனைக் காப்பியக் கவிகள் காம எரி எழ விகற்பித்திட்டார் என்றான். - (ஆதலின்) ஊன் திரளாகிய இதனைக் காப்பியஞ் செய்யுங் கவிகள் மக்கட்குக் காமத்தீ எழ வேறுபடுத்திக் கூறினர் என்றான்.

   (வி - ம்.) இவளுக்குத் தெளிவுண்டாகுமென்று இவற்றைக் கூறினான். தன் நெஞ்சுக்கும் இவளுக்கும் தெளிவுண்டாக இத்துணையும் கூறும் அறிவுடைமையை யெல்லாம் சீவகனுக் கேற்றாமல் வனசரிதனுக்குத் தகவுபடுத்துதல் எங்ஙனம் பொருந்தும்? அழகிய பெண்ணுருவை நோக்கியும் 'பெற்றியில் நின்றிடின் பேடியர் அன்றோ?' நெகிழும் நெஞ்சைத் தன் வயப்படுத்துதல் சீவகனுக்கு எப்போதும் இழுக்காகாது

( 29 )

வேறு

1586 காதன் மாமன் மடமகளே
  கருங்குழன் மேல்வண் டிருப்பினு
மேத முற்று முரியு
  நுசுப்பென் றுன்னியல் பேத்துவே
னோதம் போல வுடன்றுடன்று
  நைய நீயொண் டாமரைக்
கோதை போல்வா யொளித்தொழிதல்
  கொம்பே குண னாகுமே.

   (இ - ள்.) காதல் மாமன் மடமகளே! - அன்புறும் மாமனுடைய மடப்பம் பொருந்திய மகளே!; ஒண் தாமரைக்கோதை போல்வாய் - ஒள்ளிய தாமரையிலுள்ள திருவனையாய்!, கொம்பே! - பூங்கொம்பு போல்வாய்!; கருங்குழல் மேல் வண்டு இருப்பினும் ஏதம் உற்று நுசுப்பு முரியும் என்று ஏத்துவேன் - கரிய கூந்தலின் மேல் வண்டு தங்கினும் துன்பம் உற்று இடை ஒடியும் என்று நின்னைப் புகழ்வேனாகிய நான்; ஓதம் போல உடன்று உடன்று நைய - கடலலை போல வருந்தி வருந்திக் கெடும்படி; நீ ஒளித்து ஒழிதல் குணன் ஆகுமே? - நீ மறைந்து நீங்குதல் நன்றாகுமோ?

   (வி - ம்.) இதுமுதல் ஏழு செய்யுள் பவதத்தன் கூற்று. ஏதமுற்று - துன்பமுற்று. நுசுப்பு - இடை, ஓதம் - கடல், தாமரைக்கோதை - திருமகள். கொம்பு - அனங்கமாலை. குணனாகுமே என்புழி ஏகாரம் எதிர்மறை. கொம்பு, கொம்புபோல்வாளை யுணர்த்துதலால் உவமையாகு பெயராம். கோதை - பெண். தாமரைக் கோதை - தாமரைப் பூவில் வாழும் பெண்.

( 30 )