பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 911 

   (இ - ள்.) இனையல் வேண்டா - நீ வருந்தல் வேண்டா; நீ இம் மந்திரத்தை ஓதி ஒருவில் ஏ அளவு அனைய எல்லை சென்றால் - நீ யான் கூறும் மந்திரத்தைக் கூறி ஒரு வில்லிலிருந்து அம்பு சென்ற அளவை யொத்த எல்லைபோனால்; இயக்கி கொணர்ந்து அருளும் - அவ்விடத்தே அவளை இயக்கி கொண்டுவந்து தருவாள்; நீ புனைசெய் கோல் வளையைக் கைப்படுதி - அப்போது நீ ஒப்பனைசெய்த திரண்ட வளையுடையாளைக் கையிலே பெறுவாய்; என்று ஆங்கு அவன் போதலும் - என்றுகூறிச் சீவகன் ஆங்கு நின்றும் சென்றவுடனே; அனைய மாதரைக் கண்டு ஆங்கு அடி புல்லி வீழ்ந்து அரற்றினான் - பவதத்தனும் பிறர் பின் சென்று மெலிந்து நிற்கும் அத்தகையவளைப் பார்த்து; ஆங்கு அவள் அடியைத் தழுவி வீழ்ந்து அழுதான்.

   (வி - ம்.) மந்திரம் : மகளிரை மயக்குவதாகிய மந்திரம். தான் அநங்கமாலையைக் கண்டதைக் கூறிற்றிலன், தன்னையும் ஐயுற்றுத் தீங்கு புரிவான் என்று கருதி.

( 44 )
1601 பட்ட வெல்லாம் பரியா
  துரைத்தா னவளுங் கேட்டாள்
விட்டா ளார்வ மவன்க
  ணிவன்மேன் மைந்துறவினான்
மட்டார் கோதை மனைதுறந்தாண்
  மைந்தனு மங்கை மேலே
யொட்டி விள்ளா வார்வத்த
  னாகி யுருவ மோதினான்.
 

   (இ - ள்.) பட்ட எல்லாம் பரியாது மைந்தனும் உரைத்தான் - அவ்வாறு அழுதுதான் அடைந்த யாவையும் வருந்தாமலே அம் மைந்தனும் கூறினான்; மட்டு ஆர் கோதை மனை துறந்தாள் - தேனார்ந்த கோதையாள் அடிநாளிலேயே மனையை விட்டு வந்தவள்; மங்கைமேலே விள்ளா ஆர்வத்தன் ஆகி ஒட்டி உருவம் ஓதினான் - இவள்மேல் இவன் நீங்கா ஆசையுடைய வனாகிய இவளைப் பெறவேண்டும் என்று ஒட்டி அம் மந்திரத்தைப் பலவுரு ஓதினான்; அவளும் கேட்டாள் - அம்மந்திரத்தை அவளும் கேட்டாள்; இவன்மேல் மைந்து உறவினால் அவன்கண் ஆர்வம் விட்டாள் - கேட்டதனால் பவதத்தன்மேல் அன்பு வலியுற்றதனால், சீவகன் பாற்கொண்ட ஆசையை விட்டாள்.

   (வி - ம்.) அம் மந்திரம் அவள் நெஞ்சை இவ்வாறு பிணிப்பித்த தென்று உணர்க. 'அவன்கண் ஆர்வம்' என்பதற்கு வனசரிதன் மேற் சென்ற ஆர்வம் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்

( 45 )