பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 913 

   (இ - ள்.) சாந்தும் கோதையும் தண்ணறுஞ் சுண்ணமும் ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து - சந்தனமும் மலர்மாலையும் தண்ணிய நறிய சுண்ணப் பொடியும் ஆராய்ந்த அகிற் புகையும் அவியும் சுமந்து; ஏந்து பொன் விளக்கு ஏந்தி - உயர்ந்த பொன் விளக்கை எடுத்துக்கொண்டு; இடம் பெறா மாந்தர் சும்மை ஓர்பாலெலாம் மலிந்தது - இடம்பெறாத மக்களின் ஆரவாரம் ஒரு பக்கமெல்லாம் நிறைந்தது.

   (வி - ம்.) சாந்து - சந்தனம். சுண்ணம் - மணப்பொடி. பூம்புகை ஈண்டு நறுமணப்புகை. அவி - கடவுட்கிடும் பலிப்பொருள். ஏந்து - உயர்ந்த. சும்மை - ஆரவாரம.்

( 48 )
1605 துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை
நிறங்கொ ளாரம்பைம் பூணிழற் குண்டலம்
பிறங்கு வெங்கதிர் மின்னொடு பின்னிவீழ்ந்
துறங்குகின்றன போன்றவொர் பாலெலாம்.

   (இ - ள்.) துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை நிறம் கொள் ஆரம்பைம்பூண் நிழல் குண்டலம் பிறங்கு வெங்கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து - துறந்த அரசர் (துறப்பதற்குமுன் அணிந்திருந்த) தூயமுடியும் தோள்வளையும் ஒளிபொருந்திய முத்துமாலையும் புதிய பூணும் ஒளிவிடும் குண்டலமும் ஆகிய இவை விளங்கும் வெம்மைமிகும் கதிரும் மின்னும் பின்னி வீழ்ந்து; ஒர்பாலெலாம் உறங்குகின்றனபோன்றன - ஒரு பக்க மெல்லாம் உறங்குவன போன்றன.

   (வி - ம்.) துறந்த அரசர் - துறந்தபொழுது களைந்திட்ட முடி. முதலியன என்பது கருத்து . ஆரம் - முத்துமாலை. நிழல் - ஒளி. பிறங்குதல் - ஒளிவிடுதல்.

( 49 )
1606 கருவித் தேன்கலை கையுறக் கீண்டுடன்
மருவிப் பைங்கறி வாரிப் பழந்தழீஇ
வெருவி நாகம் பிளிற்ற விரைந்துரா
யருவி நின்றதி ரும்மொரு பாலெலாம்.

   (இ - ள்.) கருவித்தேன் - கைத்தளம் போலும் தேனடை; கலை கைஉற உடன்மருவிக் கீண்டு - ஆண் முசுவின் கை உறுதலாலே சேரக் கிழிந்து; விரைந்து உராய் - விரைந்து பரந்து; பைங்கறி வாரி - பச்சை மிளகை வாரி; பழம்தழீஇ - பழங்களைத் தழுவி; நாகம் வெருவிப் பிளிற்ற - யானைகள் அஞ்சிப் பிளிறும்படி; ஒருபாலெலாம் அருவி நின்று அதிரும் - ஒருபக்கமெல்லாம் அருவியாய் நின்று ஒலிக்கும்.