பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 916 

   (வி - ம்.) அரனும் அரியும் அயனும் இவனே என்பது கருத்து. செய்யுள்: தேவபாணிக் கொச்சக ஒருபோகு.

   காமனையும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. அறவாழி அண்ணல் அருகனுக்கு ஒரு பெயர். 'அறவாழி அந்தணன்' என்பர் திருவள்ளுவனாரும். விளியா - அழியாத.

( 55 )

வேறு

1612 இன்னண மேத்தி யிறைவ னடிதொழு
தன்ன முறங்கு மணிவரை மேனின்று
பொன்னங் கழலா னிழிந்து பொழிமழை
மின்னி னடந்து மிகுசுரஞ் சென்றான்..

   (இ - ள்.) பொன் அம் கழலான் - பொற் கழலான்; இன்னணம் இறைவன் அடி ஏத்தித்தொழுது - இங்ஙனம் அருகன் அடியைப் போற்றி வணங்கி; அன்னம் உறங்கும் அணிவரைமேல் நின்று இழிந்து - அன்னங்கள் துயிலும் அழகிய மலைமேலிருந்து இறங்கி; பொழி மழை மின்னின் நடந்து - பெய்யும் முகிலிடை மின்போல விரைந்து நடந்து; மிகுசுரம் சென்றான் - பெருங் காட்டுவழியே சென்றான்.

   (வி - ம்.) 'மழை மின்னின்' என்பது தூரகமனம் வல்லன் என்பதை உணர்த்துகிறது என்பர் நச்சினார்க்கினியர்.

   இறைவன் - அருகக்கடவுள். கழலான் - சீவகன., மின் விரைந்து செல்லுதற்குவமை.

( 56 )
1613 மாலைக் கதிர்வேன் மலங்க மணிமலர்க்
கோலை விடுக ணுருகு கொடியிடை
யேலங் கமழ்குழ லேழை யவரன்ன
வாலைக் கரும்பி னகநா டணைந்தான்.

   (இ - ள்.) மாலைக் கதிர்வேல் மலங்க - மாலை அணிந்த ஒளிவிடும் வேல் கெடுதலினால்; மணிமலர்க்கு ஓலை விடுகண் - நீல மலர்க்குப் போரோலை செலுத்தும் கண்ணினையும்; உருகு கொடியிடை - தேயும் கொடிபோன்ற இடையினையும்; ஏலம் கமழ்குழல் - மயிர்ச் சாந்து மணக்கும் கூந்தலையும்; ஏழையவர் அன்ன - மகளிரைப்போன்ற (ஐம்புலனும் நுகரும் பொருள்களையுடைய); ஆலைக் கரும்பின் அகநாடு அணைந்தான் - ஆலைகளிற் கரும்பு பிழியும் மருதநாட்டை அடைந்தான்.

   (வி - ம்.) அகநாடு - மருதநாடு. 'அகநாடு புக்கவர் அருப்பம் வெளவி' (மதுரைக்.149) என்றார்.