பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 926 

1632 காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா
வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமாற்
றாது துற்றுபு தங்கிய வண்டனார்க்
கேத மிற்றென வெண்ணுமென் னெஞ்சரோ.

   (இ - ள்.) தாது துற்றுபு தங்கிய வண்டனார்க்கு - தேனைப் பருகிக்கொண்டு அதிலே தங்கிய வண்டை ஒக்கும் தலைவர்க்கு; ஏதம் இற்றுஎன என் நெஞ்சம் எண்ணும் - காதலால் வரும் துன்பம் இவ்வாறு பெருகக் கூடியதாய் இருந்தது என்று இகழ்ந்து அறிவுடையோர் கூறுமாறு என் நெஞ்சு எண்ணும்; காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா ஆதல் - (இங்ஙனம் எண்ணும்படி) காதல் மிக்கவிடத்துக் கற்ற கல்வியும் கைகொடா தனவாய் நீங்குதல்; கண்ணகத்து அஞ்சனம் போலும் - கண்ணுட் கிடந்த மையானது கண்ணுக்குப் பயன்படா தவாறு போலும்.

   (வி - ம்.) 'கற்றவும்' என்ற உயர்வு சிறப்பும்மை துன்பம் நீங்குதற்குக் கற்ற கல்வி யென்பதனை உணர்த்தியது. பவதத்தனுடைய காதல் வருத்தம் நீங்க அறிவுரை கூறியவன் தான் காதலால் வருந்துவதை யெண்ணிக், 'கற்றவுங் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலும்' என்றான். மற்றும் சச்சந்தனை யெண்ணியும் இது கூறினான் என்க.

   இனி, இற்றென என் நெஞ்செண்ணும். இது வண்டனார்க்கு ஏதம் என்றுமாம்; 'இற்று' என்றது முற்கூறிய வருத்தத்தை. வண்டன்னார் - உத்தமர். இனி, வண்டன்னார் தபோதனர்; பிரமராசனராதலின், அப் பெயராயிற்று. அவர்க்கே வருத்தம் இல்லாததென்று எண்ணும் என்றுமாம். இன்று - இற்றென விகாரம்; - இவ்வாறு நச்சினார்க்கினியர் அகலங் கூறுவர்.

( 76 )
1633 நறவெங் கோதையர் நன்னலங் காதலான்
மறவெங் காமத்து வந்துற்ற தீவினைப்
பறவைத் தோ்நர கத்துப் பதைக்குங்கா
லறிவ னல்லதங் கார்சர ணாகுவார்.

   (இ - ள்.) நற வெம் கோதையர் நல் நலம் காதலான் - தேனையுடைய விருப்பூட்டுங் கோதையரின் நல்ல நலத்தில் உள்ள காதலினாலும்; மறவெம் காமத்தும் - பாவத்தொழிலாகிய அவரைப் புணருங் காமத்தாலும்; வந்துற்ற தீவினைப் பறவைத் தேர் நரகத்துப் பதைக்குங்கால் - வந்து சேர்ந்த தீவினையாகிய பறக்குந் தேரிலே போய் நரகத்திலே பதைக்கும்போது; அறிவன் அல்லது அங்கு சரண் ஆகுவார் ஆர்? - அருகனையல்லாமல் அவ்விடத்தே புகலாவார் இல்லையே? (ஆதலின் ஈண்டு அவனே சரண்).