பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 938 

   (இ - ள்.) ஊன் உண் சிங்கக் குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான் - ஊனை உண்ணும் சிங்கக் குருளையின் பற்களை ஒப்ப ஒளிரும் பற்களையுடைய சீவகன்; தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து - வண்டுகள் தேனைப் பருகும் மலர்களாலே முற்கூறிய வகைமாலை நீங்கலாக ஒரு மாலையையும் பந்தையும் பின்னும் கட்டி; தேம் ஆர்ந்த நானம் தோய்த்து - இனிமை நிறைந்த புழுகிலே இவற்றைத் தோய்த்து; நனை கலவை நாறும் மதம் தெளித்தபின் - அவற்றின் அரும்புகளுக்குச் சந்தனத்தோடு கூடிய பனிநீரையும் புழுகையும் தெளித்த பின்; பால்நுண் தீ சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள் - பாலைப் போல இனிய மொழியாளாகிய ஒரு பணிப் பெண் வண்டுகள் முரல வந்து வணங்கினாள்.

   (வி - ம்.) பலாச் சுளை கலந்த மாலை ஓலைப் பாசுர மாலையாகும். இதனைப் பிறர் ஐயுறாதவாறு மற்றவற்றையுங் கட்டினான். 'குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை' (தொல் - மரபு - 19) என்றதனுள், 'கொடை' என்றதனாற் சிங்கக் குழவியுங் கொள்க.

( 97 )
1654 நெடிய வாட்கண்கள் வாயா
  விமைப்பெ னுஞ்சொல் லின்மற்றெங்
கொடியிற் கொத்த விவையென்றா
  ணம்பியுங் கொள்க வென்றான்
வடுவும் வேலு மலருங்
  கயலும் வனப்ப ழித்தகண்
ணடியஞ் சிலம்பி னாட்குய்த்
  திறைஞ்சிக் காட்ட வவள்கொண்டாள்.

   (இ - ள்.) நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் - (வந்தவள்) தன் நீண்ட வாளனைய கண்கள் வாயாக இமைப்பு எனும் சொல்லாலே; எம் கொடியிற்கு இவை ஒத்த என்றாள் - எம் கனகமாலைக்கு இம் மாலைகளும் பந்தும் பொருந்தின என்றாள்; நம்பியும் கொள்க என்றான் - சீவகனும் கொள்க என்று கொடுத்தான்; வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண் அடி அம் சிலம்பினாட்கு - மாவடுவையும் வேலையும் நீல மலரையும் கயலையும் அழகினாலே அழித்த கண்களையும் அடியிலே அழகிய சிலம்புகளையும் உடைய கனகமாலைக்கு; உய்த்து இறைஞ்சிக் காட்ட அவள் கொண்டாள் - கொண்டு சென்று வணங்கிக் காட்ட அவளும் வாங்கிக் கொண்டாள்.

   (வி - ம்.) படுவி குறிப்பறிந்து கொடுத்தாள்

   வாயா - வாய்ஆக. இமைப்பு - இமைத்தல். அப்படுவி குறிப்பான் இவை கனகமாலைக்கு ஏற்றன வென்றுணர்த்தினாள் என்பது கருத்து.