பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 945 

வெதும்பும்; ஆவி வெய்து உயிர்க்கும் - (அதனால்) உடம்பைக் கைவிடும் உயிரும் போகாமல் நெட்டுயிர்ப்புக் கொள்ளும்; பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவதாயினேன் - (யானும்) மலரணிந்த மென் கூந்தலாரின் பொல்லாங்கை நோக்கி நகைப்பாரின் நகைப்புக்குரிய பொல்லாங்கின் வடிவாயினேன்; யாரும் இல்லாத் தமியேனே - இவ்வாறு யாரும் இல்லாத தமியேனே; தாம மார்பன் தான் புனைந்த தண் என் மாலை புணை ஆக - மாலை மார்பன் தான் தொடுத்த தண்ணிய மலர்த் தொடையே தெப்பமாக; யாமக் கடலை நீந்துவேன் - இரவாகிய கடலை நீந்திச் செல்வேன். (நீந்துதல் அரிது).

   (வி - ம்.) அவன் கையாற் புனைதலின் அது கொண்டு நீந்தலாமோ என நினைத்து, அதனை மறுத்தாள்.

( 107 )
1664 செம்பொற் கடம்பன் செவ்வேலுங்
  காமன் சிலையிற் றொடுத்தலர்ந்த
வம்பும் வென்ற வரிநெடுங்க
  ணம்மா மதிவாண் முகத்தினாள்
வம்பு பூத்து முருகுலாய்த்
  தேன்கொப் புளித்து நின்றதோர்
கொம்பு வெந்தீ யிடைப்பட்ட
  தொத்தாள் விரைசெய் கோதையே.

   (இ - ள்.) செம் பொன் கடம்பன் செவ்வேலும் - சிவந்த பொன் அனைய கடம்பணிந்த முருகனுடைய சிவந்த வேலையும்; காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த அம்பும் - காமனுடைய வில்லிலே தொடுக்கப்பட்டு மலர்ந்த அம்பையும்; வென்ற வரி நெடுங்காண் அம் மா மதி வாள் முகத்தினாள் - வென்ற செவ்வரி பரந்த நீண்ட கண்களையும் அழகிய பெரிய திங்களனைய ஒளி பொருந்திய முகத்தையும் உடையாள்; விரை செய்கோதை - மணமிகுங் கோதையாள்; வம்பு பூத்து முருகு உலாய்த் தேன் கொப்புளித்து நின்றது - புதிதாய் மலர்ந்து மணந் தங்கித் தேனைச் சிந்தி நின்றதாகிய; ஓர் கொம்பு வெந்தீயிடைப் பட்டது ஒத்தாள் - ஒரு மலர்க் கொம்பு கொடிய நெருப்பிலே வீழ்ந்ததைப் போன்றாள்.

   (வி - ம்.) கடம்பன் - முருகன், அலர்ந்த அம்பு - மலர்ந்த மலரம்பு - முகத்தினாள் ஆகிய கோதை என இயைக்க. வம்புபூத்து - புதிதாக மலர்ந்து என்க, முருகு - மணம். விரைசெய் - மணத்தைத் தரும். கோதை - கூந்தல்; இஃது உடையாளை யுணர்த்தியது. காமனுக்குத் தாமரை மலரும் நீல மலரும் அம்பு ஆதலின் 'அம்பும் வென்ற' கண் என்றார்.

( 108 )