பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 946 

வேறு

1665 மணிநிற மாமை சாயல்
  வளையொடு வண்டு மூசு
மணிநிறப் போர்வை யாய
  வரும்பெற னாணும் விற்றுப்
பணிநலம் புதிய துண்டான்
  பன்மலர் மாலை கொண்டேன்
பிணிநிறப் புறஞ்சொ லென்னும்
  பெருமிஞி றார்ப்ப வென்றாள்.

   (இ - ள்.) மணி நிற மாமை சாயல் - நீல மணி போலும் மாமையினையும் மென்மையினையும்; வளையொடு - வளையலையும்; அணி நிறப் போர்வை யாய அரும் பெறல் நாணும் விற்று - மகளிர்க்கு அழகிய நிறமுடைய போர்வையாகிய பெறுதற்கரிய நாணத்தையும் விற்று; பணி நலம் புதியது உண்டான் வண்டு மூசும் பன் மலர் மாலை - தாழ்கின்ற என் அழகைப் புதியதாக உண்டவன் கொடுத்த வண்டு மொய்க்கும் பல மலர்களால் ஆன மாலையை; பிணி நிறப் புறஞ் சொல் என்னும் பெரு ஞிமிறு ஆர்ப்பக் கொண்டேன் என்றாள் - நோயை நிறமாகவும் புறஞ்சொல் என்னும் பெரிய ஞிமிறுகள் ஆர்ப்பக் கொண்டேன் என்றாள்.

   (வி - ம்.) மாமை - நிறம், சாயல் - மென்மை/ தன்மை மறைத்துக் கோடற்குக் காரணமாதல் பற்றி நாணத்தைப் போர்வை என்றாள். நாணமே மகளிர் அழகை மிகுவித்தலின் அணிநிறப் போர்வையாய நாணம் என்றாள். வண்டுமூசும் பன்மலர்மாலை என இயைத்துக் கொள்க.

( 109 )

1666 காதலான் காதல் போல
  வகன்று நீண் டலர்ந்தவாட்கட்
போதுலாங் கோதை மாதர்
  புனைந்தலர் தொடுத்த மாலை
யாதலா லலர தாகா
  தொழியுமே யழுங்க லென்று
மாதுலா மழலைச் செவ்வாய்
  மடக்கிளி மொழிந்த தன்றே.

   (இ - ள்.) காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண் - நின் கணவனின் அன்பைப்போல அகன்று நீண்டு மலர்ந்த ஒளிமிகுங் கண்களையும்; போது உலாம் கோதை