பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 947 

மாதர் - மலர் நிறைந்த மாலையையும் உடைய மங்கையே!; அலர் புனைந்து தொடுத்த மாலை ஆதலால் - இஃது அலராற் புனைந்து தொடுத்த மாலையாகையால்; அலரது ஆகாது ஒழியுமே! -அலருடைய தாகாமல் நீங்குமோ?; அழுகங்கல் என்று வருந்தாதே என்று; மாது உலாம் மழலைச் செவ்வாய் மடக்கிளி மொழிந்தது - அன்பு பொருந்திய மழலை பேசும் செவ்வாயை உடைய இளங்கிள்ளை இயம்பியது.

   (வி - ம்.) அதனால் ஆறுதல் கொண்டாள். அலர் - பழிச் சொல்.

   காதலான் என்றது சீவகனை. மாதர் - விளி, இஃதலராயிற்றே என்று வருந்திய கனகமாலைக்குக் கிளி சிலேடைவகையால் அலராற்றெடுத்த மாலை கொண்ட நின்பால் அலருண்டாகாமற் பின் என்னுண்டாம் என அசதியாடி நகைச்சுவை பிறப்பித்து அவளை ஆற்றியது என்றபடியாம்.

( 110 )

வேறு

1667 என்னை யுள்ளம் பிணித்தென்
  னலங்க வர்ந்தவீர்ந் தாரினான்
றன்னை யானும் பிணிப்பே
  னெனத்தன் மணிச்செப் பினுண்
மன்னு மாலை கொடுத்தவனுக்
  குய்த்தீ யெனத்தொ ழுதுகொண்
டன்ன மென்னா வொதுங்கிச்
  சிலம்பரற் றச்சென் றணுகினாள்.

   (இ - ள்.) என்னை உள்ளம் பிணித்து - என் உள்ளத்தை இறுகப் பிணித்து; என் நலம் கவர்ந்த ஈர்ந்தாரினான் தன்னை - என் அழகையும் கொண்ட குளிர்ந்த மாலையானை; யானும் பிணிப்பேன் என - யானும் அவ்வாறே பிணிப்பேன் என்று கருதி; தன் மணிச் செப்பினுள் மன்னும் மாலை கொடுத்து - தன் மணிச் செப்பிலே வைத்திருந்த மாலையை (அநங்க விலாசினி யென்பாள் கையில்) கொடுத்து; உய்த்து அவனுக்கு ஈ யென - கொண்டு போய் அவனுக்குக் கொடு என்றுரைக்க; தொழுது கொண்டு - (அவளும்) தொழுது அம் மாலையை வாங்கிக் கொண்டு; அன்னம் என்ன ஒதுங்கிச் சிலம்பு அரற்றச் சென்று அணுகினாள் - அன்னம் போல ஒதுங்கிச் சிலம்பு மிழற்றச் சென்று அவனை அடைந்தாள்.

   (வி - ம்.) என் உள்ளத்தை என வேற்றுமையுருபினை உள்ளத்தோ டொட்டுக. ஈர்ந்தாரினான் - சீவகன், உய்த்து ஈ எனக் கண்ணழித்துக் கொள்க. ஒதுங்கி - நடந்து.

( 111 )