பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 955 

இன்றி - வெற்றியிலே தளரும் தன்மையின்றி; தானையை உடைக்கும் வெம்போர் - அப் பகைப் படையைக் கெடுக்கும் கொடிய போர்த் தொழிலிலே; மைந்தர் தருக்கினார் என்று - அவன் பிள்ளைகள் மிகுத்தார் என்று; தானை சூழ் மன்னற்கு உய்ந்தார் - படை சூழ்ந்த தடமித்த மன்னனுக்குக் கூறினர்; மன்னனும் தருக என்றான் - தடமித்தனும் யாம் காணுமாறு அவரைக் கொணர்க என்றான்.

   (வி - ம்.) தானை - படை, ஒற்றி - மறைவின் அறிந்து, ”தனியனாயினும் தானையோடாயினும் புகவும் போக்கும் பொச்சாப்பின்றி” என்றார் கதையினும், (1-37 : 41-2.) மைந்தர் விசயன் முதலியோர்

( 123 )
1680 மழையொடு சூழ்ந்து கொண்ட
  வான்றுகள் சிலையி னீக்கிக்
குழைமுக நெற்றி நக்கக்
  கோலவிற் பகழி வாங்கி
யிழைபக விமைப்பி னெய்திட்
  டெறிந்துமின் றிரிவ வேபோல்
விழைவுறு குமரர் புக்குச்
  சாரியை வியத்த ரானார்.

   (இ - ள்.) விழைவுறு குமரர் - கலை விருப்பங்கொண்ட அரசன் மக்கள்; மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கி - அம்புகளினாற் கூடங் கட்டி மழையையும் அதனுடன் சூழ்ந்த தூளியையும் வில்லால் விலக்கிக் காட்டி; முகம் குழை நெற்றி நக்கக் கோலவில் பகழி வாங்கி - முகத்திலுள்ள குழையின் நெற்றியைத் தொடுமாறு அழகிய வில்லிற் கணையைத் தொடுத்து வளைத்து; இழைபக இமைப்பின் எய்திட்டு - நூல் பிளக்க நொடியிலே எய்து காட்டி ; எறிந்து - அவ்வாறே வாளாலும் வேலாலும் நூல் பிளக்க எறிந்து காட்டி; மின் திரிவவேபோல் - மின் திரியுமாறு போல ; சாரியை புக்கு வியத்தர் ஆனார் - சாரியை திரியும் தொழிலிலே புக்கு வியக்கத் தக்கார் ஆயினார்.

   (வி - ம்.) ”சூழ்ந்து கொண்ட மழையையும் தூளியையும் வில்லாலே நீக்குதல் - சர கூடங் கட்டி அதனாலே விலக்கிக் காட்டுதல். அத்திரங்கற்ற தன்மையையும் பயன்கொண்ட தன்மையையும் இத் தொடர்நிலைச் செய்யுளுட் கூறாமையின் நெருப்பும் நீருமாகிய அத்திரங்களை விட்டானென்றல் பொருந்தாது. விசயன் காண்டவ வனம் எரித்ததூஉம் சரகூடங் கட்டி யென்றுணர்க” - இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதால் இங்ஙனம் முன்னர் பொருள் கொண்டன ரெனக் கொள்ளவேண்டும்.

   'மழை கூறவே புய முட்டியும் துகள் கூறவே சிரோமுட்டியும், குழை நெற்றி நக்க வாங்கி யெனவே சுந்தர முட்டியும் கூறினார். மேல்