பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 960 

1687 பாரெலா மறிய நின்று
  படாமுர சார்ப்பத் தீவேட்
டேருலாங் கோதை யின்பத்
  திளநலம் பருகு கின்றான்.

   (இ - ள்.) வார் உலாம் முலையினாட்கும் வரிசிலைத் தடக்கையாற்கும் - கனகமாலைக்கும் சீவகனுக்கும்; வதுவை நல்நாள் செப்பினார் - மணத்துக்குரிய நல்ல நாளைக் கூறினர்; சீர் உலாம் கோலம் செய்தார் - சிறப்புப் பொருந்திய மணக் கோலம் செய்தனர்; பார் எலாம் அறிய நின்று படாமுரசு ஆர்ப்ப - உலகெலாம் அறியுமாறு நின்று ஒலியவியா முரசு ஆரவாரிக்க; தீ வேட்டு - தீயிலே ஆகுதி பண்ணி; ஏர் உலாம் கோதை இன்பத்து இளநலம் பருகுகின்றான் - அழகு பொருந்திய கோதையாளின் இன்பந்தரும் இளநலத்தைத் துய்க்கலுற்றான்.

   (வி - ம்.) முலையினாள் - கனகமாலை, தடக்கையான் - சீவகன், வதுவை - திருமணவிழா, பார்; ஆகுபெயர். ஏர்-அழகு, கோதை - கனகமாலை, இளநலம் - இளமையழகு.

( 131 )
1688 மோட்டிளங் குரும்பை யன்ன
  முலைக்கடாக் களிறு முத்தஞ்
சூட்டிய வோடை பொங்க
  நாணெனுந் தோட்டி மாற்றி
யாட்டிய சாந்த மென்னு
  முகபடா மழித்து வெம்போ
ரோட்டற வோட்டிப் பைந்தா
  ருழக்கியிட் டுவந்த வன்றே.

   (இ - ள்.) மோட்டு இளங் குரும்பை அன்ன முலைக்கடாக் களிறு - பெரிய இளங் குரும்பை போன்ற முலைகளாகிய மதகளிறுகள்; முத்தம் சூட்டிய ஓடை பொங்க - முத்துக்களாகிய அணிந்த நெற்றிப்பட்டம் பொங்க; நாண் எனும் தோட்டி மாற்றி - நாணமாகிய அங்குசத்தை நீக்கி; ஆட்டிய சாந்தம் என்னும் முகபடாம் அழித்து - பூசிய சாந்தமாகிய முகபடாத்தை விலக்கி; வெம்போர் - விரும்பிய முயக்கமாகிய போரில்; ஓட்டு அற ஒட்டி - பொருந்தாத இடமிலை யென்னுமாறு மார்பெங்கும் பொருத்தி; பைந்தார் உழக்கியிட்டு உவந்த - புதிய மாலையை மிதித்துக் கீழே போகட்டு மகிழ்ந்தன.

   (வி - ம்.) கொடிய போரை இனிக் கேடில்லை யென்னும்படி கெடுத்துத் தூசியை உழக்கி யென்றும் கொள்க.

( 132 )