பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 963 

   (இ - ள்.) சேய் நலம் கடந்த செல்வன் - முருகன் அழகையும் வென்ற சீவகன்; காய்வுறு வேட்கை தன்னால் - எரியும் காமத் தீயினால்; கங்குலும் பகலும் விள்ளான் - இரவும் பகலும் நீங்காதவனாய்; வேய் வெறுத்து அமைந்த தோளாள் - மூங்கிலை அது ஒவ்வாமையால் வெறுத்துப் பொருந்திய தோளாளை; விழுத்திரை அமுதம் என்று - சிறந்த பாற்கடலிலே தோன்றிய அமுதம் என்று கருதி; திரு நலம் தெளித்திட்டு ஆற்ற - ஊடலாற் கலங்காதவாறு அவள் அழகைப் புனைந்துரைத்து தெளிவித்து ஆற்றுதலால் : மடக்கிள்ளை மருட்டும் சொல்லாள் - இளங்கிளியை மயக்கும் சொல்லினாள்; வாய்விடாள் பருகியிட்டாள் - நீங்காமல் நுகர்ந்திட்டாள்.

   (வி - ம்.) விள்ளான் - நீங்காதவனாகி, வேய்தான் ஒவ்வாமையான் வெறுத்துமாறின தோள் என்க. விழுத்திரை என்றது திருப்பாற்கடலை. சேய் : முருகன், பருகியிட்டாள் : ஒருசொல்; பருகினாள் என்க.

( 136 )
1693 திரையிடைக் கொண்ட வின்னீ ரமுதுயிர் பெற்ற தென்னு
முரையுடைக் கோதை மாத ரொளிநல நுகர்ந்து நாளும்
வரையுடை மார்ப னங்கண் வைகின னென்ப மாதோ
கரைகட லனைய தானைக் காவலன் காத லானே.

   (இ - ள்.) வரையுடை மார்பன் - வரை தோற்கும் மார்பனான சீவகன்; திரையிடைக் கொண்ட இன்னீர் அமுது உயிர் பெற்றது என்னும் - இனிய பண்புடைய அமுதம் உயிர் பெற்ற தென்கின்ற; உரையுடைக் கோதை மாதர் - உலகம் புகழும் உரையை இப்போது கொண்ட கனகமாலையின்; ஒளிநலம் நாளும் நுகர்ந்து - ஒளியுறும் அழகை எப்போதும் பருகி; கரை கடல் அனைய தானைக் காவலன் காதலான் - முழங்காநின்ற கடல் போன்ற படைகளையுடைய அரசன் அன்பினாலே; வைகினன் - அவ்விடத்தே சில நாட்கள் தங்கினான்.

   (வி - ம்.) 'வரையகல் மார்பன்' என்றும் பாடம். உயிர் சீவகன், அமுது : கனகமாலை.

   திரை - பாற்கடல். திரையளிப்பக் கொண்ட அமுதென்க. இனிய நீர்மையுடைய அமுது என்க. உரை - புகழ், மாதர் : கனகமாலை, மார்பன் : சீவகன், மாது, ஓ. அசைகள். கரைகடல் : வினைத்தொகை.

( 137 )
1694 வாளினான் மிடைந்த கண்ணாள்
  வருமுலைத் தடத்துள் வைகித்
தோளினான் மிடைந்து புல்லித்
  தொண்டைவா யமுத மாந்திக்
காளைசெல் கின்ற நாளுட்
  கட்டியங் காரன் மூதூர்
மீளிவேற் குருசிற் குற்றார்க்
  குற்றது விளம்ப லுற்றேன்.