பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 968 

   (இ - ள்.) ஊன் தகர்த்த அனைய போன்றும் - ஊனைச் சிதறினாற் போன்றும்; ஊடு எரி முளைப்ப போன்றும் - இடையிலே எரிகள் பலவாய் முளைப்பன போன்றும்; தோன்று பூ இலவத்து அங்கண் - தோன்றும் மலர்களையுடைய இலவமரத்தினிடையே; தொகை அணில் அனைய பைங்காய் - திரளாகிய அணிலைப் போன்ற பசிய காய்கள்; கான்ற மென் பஞ்சி ஆர்த்த - உமிழ்ந்த மெல்லிய பஞ்சினை நிறையக் கொண்ட; மெல் அணையாழ் கை நீக்கி - மெல்லிய அணையிலே சாய்ந்து யாழினைக் கையிலிருந்து நீக்கி வைத்து; தேன் தயங்கு இணர் பெய் கோதை - தேன் தங்கிய மலர்க் கொத்துக்களைப் பெய்த கூந்தலாள்; சிந்தையின் நீட்டினாள் - சிந்தனையிலே மிகுத்தாள்.

   (வி - ம்.) ”தகர்க்கப்பட்ட ஊன்போன்றும் எரி பலவாய் முளைப்பன போன்றும் தோன்றும் பூவையுடைய இலவத்திடத்து அணிலனைய காய்கான்ற பஞ்சென்க” என்பர் நச்சினார்க்கினியர். ஊனும் நெருப்பும் இலவம் பூவிற்குவமை. அதன்காய்க்கு அணில் உவமை. சிந்தை - வருத்தம். நீடினாள் என்பது நீட்டினாள் என விரிந்தது; விகாரம்.

( 145 )

வேறு

1702 நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண்மனங் கவற்றிய காமர் தொண்டைவா
யண்ணலை நினைந்துவெய் துயிர்ப்ப வாய்நலம்
வண்ணத்தின் மழுங்கிவாட் கண்ணி வாடினாள்.

   (இ - ள்.) நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர் கண் மனம் கவற்றிய காமர் தொண்டைவாய் - நுண்ணிய வரிகளுடன் திரண்டு, பார்ப்பவருடைய கண்ணையும் மனத்தையும் வருத்தின, விருப்பம் மருவிய கொவ்வைக் கனியனைய வாயின்; ஆய்நலம் ்- ஆய்தற்குரிய அழகு; அண்ணலை நினைந்து வெய்து உயிர்ப்ப - சீவகனை எண்ணிப் பெருமூச் செறிவதால்; வண்ணத்தின் மழுங்கி - பழைய வண்ணத்தினின்றும் மாறுபட்டு; வாள்கண்ணி வாடினாள் - வாளனைய கண்ணாள் உடலும் மெலிந்தாள்.

   (வி - ம்.) 'நோக்குநர் கண்மனம் கவற்றிய அண்ணல்” எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்

   கண்ணையும் மனத்தையும் கவற்றிய என்க. காமர் - காமம் மருவுதற்குக் காரணமான என்க. காமர் - அழகுமாம். வாட்கண்ணி : காந்தருவதத்தை.

( 146 )
1703 மின்றவழ் மணிவரை மாலை மார்பனை
பொன்றவ ழிளமுலை பொருது புல்லுநா
ளென்றுகொ லெனநினைந் திருந்த செவ்வியுட்
சென்றனன் சீவகற் கிளைய செல்வனே.