(வி - ம்.) பல்கலம் எனவே படைக்கலங்களும் அடங்கின, பணியின் என்றது சீவகன் கொண்டு நிற்கிற நிறமும் வடிவும் அவனைக் காணுமளவும் இவனுக்கு நிற்க வென்று நிருமித்தனை. இங்ஙனம் நிருமித்த தென்னெனின், நந்தட்டனுடைய உண்மை வடிவுடனே கொண்டுபோய் அரசன் கோயிலில், 'ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பினுள்ளே' (நெடுநல். 107) வைத்தாற் சீவகன் அறிதற்கு முன்னே தீங்கு நேரும் என்று கருதியும், அரசன் கோயிலுக்கு வெளியே விட்டாற் சீவகன் என்னும் பெயர் ஆண்டு வழங்காமையின், இவன் சீவகனுடைய புனைபெயர் அறிந்து கோயிலுட் சேறல் அரிதென்று கருதியும் என்க. அஃது, 'அந்நாட்டவ்வூரப் பெயரல்லாப் பெயர் சொன்னான்' (சீவக -1637) என்பதனாலுணர்க. இதனானே சுதஞ்சணனை நீங்கிய பின்பு தன்னை மறைத்தற்கு வடிவும் பெயரும் வேறாகவே நிகழ்த்துகின்றானென்பதூஉம் பெற்றாம். வடிவு மறையாவிடத்து நாடும் ஊரும் மறைத்ததனாற் பயனின்றாம். இவ் விலகம்பகங்களிற் சீவகனென்றது நூலாசிரியர் கூற்று. இனி, இவ்வாறன்றி, அரசர் குலத்திலும் வணிகர் குலத்திலும் பிறந்தவர்கட்குச் சிறிது வடிவொப்பன்றி ஒரு வடிவே என்று மேற்கூறல் பொருந்தாது. ஒரு வடிவே என்பது ஆசிரியர் கருத்தாயின் ஈண்டன்றிப் பிறாண்டும் இருவர்க்கும் ஒரு வடிவே என்று கூறுவர். அது கூறாமையானும் சீவகனுக்கு மாற்று வடிவும் அம் மாற்று வடிவே நந்தட்டனுக்கும் தத்தையால் நல்கப்பட்டதென்றும் கொள்வதே ஆசிரியர் கருத்து.
|
( 157 ) |