பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 985 

   (வி - ம்.) பங்கயம் - தாமரை, பொருந்துபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; இதனைச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. காளை புலம்புதல் வேண்டா - முன்னிலைப் புறமொழி - மருந்தனாள் - கனகமாலை, கற்பினாள் - கனகமாலை. அவன் - நந்தட்டன்.

( 173 )
1730 கொழுநனைக் குறிப்பி னாலே
  குமரன்யா ரென்று நோக்கக்
கழுமிய கற்பி னாய்நின்
  மைத்துன னைய னென்ன
வெழுமையும் பெறுக வின்ன
  விளங்கிளைச் சுற்ற மென்றாள்
கொழுமலர்த் தடங்கட் செவ்வாய்க்
  குவிமுலைக் கொம்ப னாளே.

   (இ - ள்.) கொழுமலர்த் தடங்கண் செவ்வாய் குவிமுலைக் கொம்பனாள் - வளவிய மலர் போன்ற பெரிய கண்களையும் செவ்வாயையும் குவிமுலையையும் உடைய பூக்கொம்பு போன்றவள்; குமரன் யார் என்று கொழுநனைக் குறிப்பினாலே நோக்க - காளை யாவன் என்று கணவனைக் குறிப்பாக நோக்க; கழுமிய கற்பினாய்! ஐயன்நின் மைத்துனன் என்ன - நிறைகற்புடையாய்! ஐயன் உன் மைத்துனன் என்றுரைக்க; இன்ன இளங் கிளைச் சுற்றம் எழுமையும் பெறுக என்றாள் - இத்தகைய இளங்கிளையாய உறவினையான் எழுபிறப்பும் பெறுவேனாக என்றாள்.

   (வி - ம்.) கொழுநன் - கணவன், குமரன் என்றது இவன் என்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. கழுமுதல் - நிறைதல். மைத்துனன். இளங்கிளைச் சுற்றம் என்பன கொழுந்தன் என்னும் பொருளன.

( 174 )
1731 குடவரை யனைய மார்பிற்
  குங்கும மெழுதிக் கோல
வடவரை வைரச் சாதி
  வாலொளி கலந்த பைம்பூண்
டடவரை மார்பின் மின்னத்
  தம்பியோ டமிர்த முண்டான்
படவர வல்கு லாளும்
  பான்மையால் விருந்து செய்தாள்.

   (இ - ள்.) குங்குமம் எழுதி குடவரை அனைய மார்பின் - குங்குமம் எழுதலாலே கதிரவன் மறையும் அத்தகிரி போன்ற நந்தட்டன் மார்பில் அணிந்த; கோல வடவரை வைரச்சாதி வால்ஒளி கலந்த பைம்பூண் - அழகிய இமயமலையினது வைரத்