பக்கம் எண் :

8

         “விண்ணோ ருருவி னெய்திய நல்லுயிர்
          மண்ணோ ருருவின் மறிக்கினு மறிக்கும்
          மக்கள் யாக்கை பூண்ட மன்னுயி்ர்
          மிக்கோய் விலங்கி னெய்தினு மெய்தும்
          விலங்கின் யாக்கை விலங்கிய வின்னுயிர்
          கலங்கஞர் நரகரைக் காணினும் காணும்
          ஆடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக்
          கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
          செய்வினை வழித்தா யுயிர்செலு மென்பது
          பொய்யில் காட்சியோர் பொருளுரை‘‘


எனவரும் இளங்கோவடிகளின் மொழியானு முணர்க.
                                         (28 : 159 - 68)


     
இனி, நரககதி விலங்குகதி மக்கட்கதி தேவகதி என்னும் நால்வகைப்
பிறப்பினூடும் ஒவ்வொன்றன்கண்ணும் எண்ணிறந்த பிறப்பு வேறுபாடுகள்
உண்மையின், ‘நனிபல பிறவி‘ என்றார். இனி, தேவகதியை யுள்ளிட்ட
எல்லாப் பிறப்பும் துன்பத்துக்கே ஏதுவாதல் பற்றி, ‘பிறவி தன்னுள்
துன்புறூஉம் நல்லுயிர் ‘ என்றார். இனி,

        “இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
         முழத்தொறூஉங் காதற் றுயிர் “         
  --குறள், 940

என்பவாகலின் துன்புறூஉம் நல்லுயி்ர் என உயி்ர்க்கு நன்மையை அடை
புணர்த்தார். இனி உயிர்க்குப் பரிந்து நல்லுயி்ர் என்று இரங்கினார்
எனினுமாம்.

     இனி, மனிதரிற் றோன்றுதல் அரியதாகும் என மாறுக.

     இனி, மக்களாய்ப் பிறந்தாலும் செல்வம் பெற்றாலொழிய
இவ்வுலகத்தின்பம் யாதொன்றும் எய்துவதின்மையான் அரிதிற் பிறந்த
அப்பிறப்பும் துன்பத்திற்கே ஏதுவாதலின் பொருளையே விதந்தெடுத்து
“இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம் “ என்றார். என்னை ?

     தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும், பொருளின் மாண்பினை,

          “அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
           தீதின்றி வந்த பொருள் “
         --குறள், 754

எனவும்,

          “அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
           செல்வச் செவிலியா லுண்டு “
         --குறள், 757

எனவும்,

          “ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
           ளேனை யிரண்டு மொருங்கு “
         --குறள், 790

எனவும்,