பக்கம் எண் :

13

அதனைக் கண்டால்; விருப்புறூஉம் - தனது பழைய நீர்நிலையை வெறுத்து
அப்புதிய வெள்ளத்தே புகுவதற்குப் பெரிதும் விரும்பும்; அங்ஙனமே,
கள்அவிழ் கோதையர் - தேன் துளிக்கின்ற மலர் மாலையணிந்த மகளிர்;
காமனோடு ஆயினும் - காமவேளையே கணவனாகப் பெற்று அவனோடு
வாழ்வாராயினும்; உள்ளம் பிறிதா உருகலும் - புதிய ஆடவரைக்
காணுமிடத்து மனமாறுபட்டு அவரைத் தழுவ நினைத்து மனமுருகு
மியல்வுடையராதலும்; நீ கொள் - நீ குறிக்கொண்டு அவரை
விரும்புதலொழிக என்பதாம்.


     
(வி - ம்.) பள்ளமுதுநீர்ப் பொய்கை - சிறப்புடைய கணவனுக்குவமை.
மீனினம் - மகளி்ர்க்குவமை. புதியது காணின் என வுவமைக்குக் கூறியதனை
புதியரைக் காணின் எனப் பொருளுக்கும் கொள்க. இது பொதுவாக மகளிரின்
மனவியல்பு கூறியபடியாம்.

இனி இச் செய்யுளோடு,

        “ஏந்தெழின் மிக்கான் இளையா னிசைவல்லான்
         காந்தையர் கண்கவர் நோக்கத்தான்--வாய்ந்த
         நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
         கயலார்மே லாகு மனம்”

எனவும்,

        “முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
         நிறையும் நெடுநாணும் பேணார்--பிறிதுமொரு
         பெற்றிமை பேதைமைக் குண்டோ பெரும்பாவம்
         கற்பின் மகளிர் பிறப்பு”


எனவும்,

        “கற்பின்மகளி னலம்விற்றுணவு கொளும்
         பொற்றொடி நல்லார் நனிநல்லர்-மற்றுத்தம்
         கேள்வதற்கு மேதிலர்க்குத் தங்கட்குத் தங்கிளைஞர்
         யாவர்க்குங் கேடுசூ ழார்”
        நீதிநெறி. 82, 83, 84

எனவும் வரும் குமரகுருபர அடிகளார் அருண்மொழியும்,

        “அன்புநூ லாக இன்சொ லலர்தொடுத் தமைத்த காத
         லின்பஞ் செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
         நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
         பின்செலும் பிறர்க ணுள்ளம் பிணையனார்க் கடிய தன்றே.”

எனவும்,